சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
12 ஆண்டுகால வளர்ச்சி: வேலைவாய்ப்பு, ஏற்றுமதியின் முதன்மை உந்துசக்தியாக உருவெடுத்துள்ள தோல், காலணி பொருட்கள் உற்பத்தித் துறை
प्रविष्टि तिथि:
08 JUN 2026 6:22PM by PIB Chennai

'உள்நாட்டுப் பொருட்களுக்கு ஆதரவு' என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் இத்துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இருமடங்காக உயர்ந்துள்ளது. 2014-15 நிதியாண்டில் 468 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பு, 2025-26 நிதியாண்டில் 863.1 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த ஒட்டுமொத்த மதிப்பில் சரக்கு ஏற்றுமதி 442 பில்லியன் டாலராகவும், சேவைகள் சார்ந்த ஏற்றுமதி 421 பில்லியன் டாலராகவும் உள்ளது. இந்த வளர்ச்சிப் பாதையில், குறிப்பாக தோல், காலணி மதிப்பு கூட்டுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதி 4.75 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவில் தமிழ்நாடு இத்துறையில் முதன்மை ஏற்றுமதி மாநிலமாகத் திகழ்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தத் துறை சார்ந்த ஏற்றுமதியில் தமிழகம் சுமார் 37 சதவீத பங்களிப்பை வழங்கி, 1.59 பில்லியன் டாலர் மதிப்பைத் எட்டியுள்ளது. இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பணியாளர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர். சென்னையின் மிக வலுவான தொழில் உற்பத்திச் சூழல், முன்னணி வெளிநாட்டு உற்பத்தியாளர்களின் வருகை ஆகியவற்றின் மூலம், இத்துறை வரும் 2030-ம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்தமாக 50 பில்லியன் டாலர் உற்பத்தி மதிப்பை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் உள்நாட்டு நுகர்வு 36 பில்லியன் டாலராகவும், உலகளாவிய ஏற்றுமதி 14 பில்லியன் டாலராகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட 24.13 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக உழைப்புத் திறன் கொண்ட இந்தத் துறை தற்போது 44.2 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற உலக நாடுகளுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், பூஜ்ஜிய-வரியில் சர்வதேச சந்தையை எளிதாக அணுகுவதற்கு மிகச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளன. ஏற்றுமதி மேம்பாடு, முன் அனுமதி, வட்டி சமன்பாட்டுத் திட்டங்கள், காப்பீட்டு ஆதரவு போன்ற மத்திய அரசின் சிறப்பான ஆதரவுத் திட்டங்களை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழில்துறை தலைவர்கள் பெரிதும் பாராட்டினர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தோல் பொருட்களின் உற்பத்திச் செயல்முறைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நிலையான வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், ஆகியவற்றை நேரில் கண்டு அறிந்துகொள்வதற்காக, தோல் பொருட்கள், காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், தோல் பதனிடும் மையங்களுக்கும் அடுத்தடுத்து களப்பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தமிழ்நாட்டின் ஏற்றுமதித் திறன் மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து, தமிழ்நாடு அரசின் தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான திரு. எஸ். விஜயகுமார் அவர்களுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
****
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2270701)
आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English