சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அந்தமானில் 'நீலப் பொருளாதாரம்' சார்ந்த முன்னெடுப்புகளை அந்தமான் நிக்கோபார் தலைமைச் செயலாளர் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2026 6:57PM by PIB Chennai

புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்தின் மீன்வளத் துறை, கவுகாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, 'நீலப் பொருளாதாரத்தை' வலுப்படுத்துவதையும், நிலையான கடல் வள மேலாண்மையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கிய தொழில்நுட்பம் சார்ந்த முன்னெடுப்புகளை இன்று தொடங்கியது.
சோதனை அடிப்படையிலான கூண்டு மீன் வளர்ப்பு, மீன் குஞ்சு இருப்பு செய்தல் ஆகியவற்றுடன், 3டி வடிவிலான அச்சிடப்பட்ட கான்கிரீட் செயற்கை பவளப்பாறை அமைப்பை நிறுவுதல் ஆகியவற்றை அந்தமான் நிக்கோபார் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்திர பூஷன் குமார் இன்று தொடங்கி வைத்தார். மேலும், பயனாளிகளுக்கு மீன் குஞ்சுகளை வழங்கியதுடன், உள்ளூர் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அறிவியல் கண்டுபிடிப்புகளை அந்தமான் தீவில் உள்ள மீனவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் முழுவதும் நிலையான வாழ்வாதாரம், தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு ஆகியவற்றை ஆதரிக்க, அறிவியல் நிறுவனங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு தேவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் திரு பாலாஜி ராமகிருஷ்ணன், அந்தமான் வளாகத்தில் கடல்சார் நிலைத்தன்மை சார்ந்த இந்த இரண்டு முக்கிய முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டதை எடுத்துரைத்தார். ஐஐடி கவுகாத்தியுடனான புதுமையான கூட்டு முயற்சியின் மூலம், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட முப்பரிமான வடிவிலான அச்சிடப்பட்ட செயற்கை பவளப்பாறை அமைப்பு கடலில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் இந்த செயற்கை பவளப்பாறைகள் அடுத்த ஓராண்டுக்கு முழுவதுமாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ விஜயபுரம் வளாகத்தில் ரூ. 15 கோடி செலவில் அதிநவீன மீன் இனப்பெருக்கக் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இம்மையம் மீன்களை வளர்ப்பது, மீன் முட்டைகளைச் சேகரிப்பது மற்றும் குஞ்சுகளைப் பொரிக்கச் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்றும், ஆழ்கடல் திறந்தவெளி மீன் கூண்டுகளுக்கு மாற்றுமுறை மீன் குஞ்சுகள் இங்கு பராமரிக்கப்படும் என்று கூறினார். அந்தமான் தீவுகளில் உயர் அதிர்வெண் ரேடார் அமைப்புகள் மூலம் கடல் நீரோட்டங்கள் மற்றும் நீரின் தரத்தைக் கண்காணிப்பதில் இந்த நிறுவனத்திற்கு உள்ள 20 ஆண்டுகால அனுபவத்தையும் தொழில்நுட்ப வலிமையையும் இந்த இரண்டு திட்டங்கள் பயன்படுத்திக் கொள்வதாக கூறினார். மீன்வளம், வனம், அறிவியல்-தொழில்நுட்பத் துறைகளுடன், மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்று இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
இந்நிகழ்வில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மீன்வளத் துறை செயலாளர் திருமதி பல்லவி சர்க்கார், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர் எஸ். தினேஷ் கண்ணன், மீன்வளத் துறை இயக்குநர் திருமதி ஜக்தாப் கல்யாணி ராஜேந்திரா, புவி அறிவியல் அமைச்சகத்தின் திட்ட இயக்குநர் சந்தீப் முகோபாத்யாய், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை இயக்குநர் டாக்டர் வசந்த குமார் ஜெனா, குழும இயக்குநர் ஜி. தரணி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் அந்தமான் பிரிவு பொறுப்பாளர் திரு திலீப் குமார் ஜா; ஐஐடி கவுகாத்தியின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிரஞ்சி பாண்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.
****
TV/SS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2269524)
வருகையாளர் எண்ணிக்கை : 98