சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய், எரிவாயுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்
மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைக் குறித்த நேரத்தில் நிறைவு செய்ய அமைச்சர் வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 6:43PM by PIB Chennai

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறைக்கான மத்திய இணையமைச்சர், திரு சுரேஷ் கோபி, நேற்று (26.05.2026) கோவையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு முக்கிய குழாய் வழி எரிவாயு திட்டங்களின் முன்னேற்றம், அதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்யப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு:
1) கெயில் நிறுவனத்தின் 'கொச்சி – கூட்டநாடு – பெங்களூரு – மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டம்': இதன் திருத்தப்பட்ட திட்ட மதிப்பு சுமார் ₹5,909 கோடி ஆகும்; இத்திட்டத்தின் பணிகள் சுமார் 96.6% நிறைவடைந்துள்ளன.
2) பிபிசிஎல் நிறுவனத்தின் 'இருகூர்–தேவனகொந்தி பல்நோக்கு குழாய் திட்டம்': இதன் திருத்தப்பட்ட திட்ட மதிப்பு சுமார் ₹1,732 கோடி ஆகும்; இத்திட்டத்தின் பணிகள் சுமார் 82.6% நிறைவடைந்துள்ளன.
3) பிபிசிஎல் நிறுவனத்தின் ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கான 'நகர எரிவாயு விநியோகத் திட்டம்': இத்திட்டத்தின் மதிப்பு ₹3,685 கோடி ஆகும்; இதன் பணிகள் சுமார் 44.6% நிறைவடைந்துள்ளன.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கெயில், பிபிசிஎல் நிறுவனங்களின் அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் நிலை குறித்து விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிபிசிஎல் நிறுவனத்தின் 'இருகூர்–தேவனகொந்தி குழாய் திட்டத்தின்' ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 'வழித்தட உரிமைப் பகுதிக்குள்' 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் பதிப்பதில் உள்ள முக்கியச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஜலகண்டபுரம் புறவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை-844 ஆகியவை வழியாக குழாய் பதிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஐடிபிஎல் திட்டத்தின் கீழ் அமையவுள்ள புதிய உந்து நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தி ஒப்படைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கான நகர எரிவாயு விநியோகத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
கெயில் நிறுவனம், தனது திட்டப் பணிகளின் நிலையை எடுத்துரைத்ததுடன், மாநில அரசின் தலையீடு தேவைப்படும் பெரிய பிரச்சினைகள் எதுவும் தற்போது நிலுவையில் இல்லை என்றும் தெரிவித்தது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி உள்கட்டமைப்புத் திட்டங்களை உரிய நேரத்தில் முடிப்பதற்கு ஏதுவாக, தடைகளை விரைவாகத் தீர்க்க வேண்டும் என திரு சுரேஷ் கோபி வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், மாநில அரசின் சார்பில் (டிட்கோ) அமைப்பும், திருப்பூர் மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி எடுப்பதாக உறுதியளித்தனர். நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், திட்டச் செயலாக்கத்தை எளிதாக்குவதற்கும் மாநில அரசும் மாவட்ட அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். அனைத்துத் தரப்பினரும் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணி, தடைகளை விரைவாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமைச்சர் திரு சுரேஷ் கோபி அறிவுறுத்தினார்.
***
TV/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266001)
வருகையாளர் எண்ணிக்கை : 31