சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வீட்டு பயன்பாட்டு பிரஷர் குக்கர் தொடர்பான கேப்சூல் பயிற்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 10:59PM by PIB Chennai
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், “IS 2347-ன் படி வீட்டு பயன்பாட்டு பிரஷர் குக்கர்” குறித்த இரண்டு நாள் கேப்சூல் பயிற்சியை 25 & 26 மே 2026 அன்று சென்னை தரமணியில் உள்ள பிஐஎஸ் தென் மண்டல அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்தது. இப்பயிற்சியில் வீட்டு பயன்பாட்டு பிரஷர் குக்கர் உற்பத்தி தொழில்துறைகளைச் சேர்ந்த தரக் கட்டுப்பாட்டு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி–F / மூத்த இயக்குனர் & தலைவருமான திரு. S.D. தயானந்த், இந்திய தரநிலைகள் நுகர்வோர் பாதுகாப்பு, தயாரிப்பு நம்பகத்தன்மை மற்றும் தர ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். வீட்டு பயன்பாட்டு பிரஷர் குக்கர்கள் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் இல்ல உபயோகப் பொருட்களில் ஒன்றாக இருப்பதால், IS 2347 தரநிலையை கடைப்பிடிப்பது நுகர்வோர் பாதுகாப்பிற்கும் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். இந்திய தரநிலைகளுக்கு இணக்கத்தை உறுதி செய்து நாட்டின் தர சூழலை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய தர நிர்ணய அமைவனம் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள், சந்தை கண்காணிப்பு, சோதனை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடக்க உரையாற்றிய இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் மண்டல துணை தலைமை இயக்குனர் திரு. சந்தீப் குமார் கனோஜியா, வீட்டு பயன்பாட்டு பிரஷர் குக்கர்கள் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இல்ல உபயோகப் பொருட்களில் ஒன்றாக இருப்பதுடன், அவை நேரடியாக நுகர்வோர் பாதுகாப்புடன் தொடர்புடையவை என அவர் குறிப்பிட்டார். நுகர்வோர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இத்தயாரிப்பு 2020ஆம் ஆண்டு கட்டாய சான்றளிப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்துறைகளுக்கு தரநிலைகள் மற்றும் இணக்க மதிப்பீட்டு நடைமுறைகள் குறித்த புரிதலை மேம்படுத்துவதில் கேப்சூல் பயிற்சிகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், நுகர்வோருக்கு கிடைக்கும் தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பெரிய நோக்கத்திற்கும் பங்களிக்கின்றன என அவர் கூறினார். பங்கேற்பாளர்கள் தயாரிப்புகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும் எனவும், பயிற்சியின் போது முழு கவனத்துடன் இருந்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டு அதிகளவில் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் தொழிற்சாலைகளில் தயாரிப்பு சோதனைகளை நிர்ணயிக்கப்பட்ட சோதனை முறைகளின்படி மேற்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

தொழில்நுட்ப அமர்வுகளை பி ஐ எஸ் துணை இயக்குனர் திரு. ஹிதேஷ் யாதவ் நடத்தினார். இவ்வமர்வுகளில், வீட்டு பயன்பாட்டு பிரஷர் குக்கர்களுக்கான இந்திய தரநிலை IS 2347, தயாரிப்பு கையேடு, ஆய்வு மற்றும் சோதனைத் திட்டம் (Scheme of Inspection and Testing – SIT), BIS தயாரிப்பு சான்றளிப்பு திட்டத்தின் கீழ் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவுகள் பராமரிப்பு தேவைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
மேலும், உரிமம் வழங்குதல் (Grant of Licence), சேர்த்தல் (Inclusion), புதுப்பித்தல் (Renewal), உரிமம் செயல்பாடு (Operation of Licence), ஒத்திவைத்தல் (Deferment), காலாவதி (Expiry) மற்றும் செயலிழப்பு (Dormancy) உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் e-BIS தளத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. IS 2347-ன் கீழ் முக்கிய மாதிரி தோல்விகள் (Critical Sample Failure) மற்றும் தயாரிப்பு திரும்பப்பெறுதல் (Product Recall) தொடர்பான வழிகாட்டுதல்கள் குறித்த சிறப்பு அமர்வுகளும் நடத்தப்பட்டன. கலந்துரையாடல் மற்றும் விளக்க அமர்வுகள் மூலம் பங்கேற்பாளர்கள் பயிற்றுவிப்பாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடி இணக்கம் மற்றும் சான்றளிப்பு தேவைகள் குறித்த நடைமுறை புரிதலை பெற்றனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் சென்னை தரமணியில் உள்ள பி ஐ எஸ் தென் மண்டல ஆய்வகத்திற்கு (SRL) அழைத்துச் செல்லப்பட்டனர்.
***
TV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265678)
வருகையாளர் எண்ணிக்கை : 13