சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

திருச்சியில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ட்ரில்லிங் ஸ்க்ரூக்கள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAY 2026 9:03PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), கோயம்புத்தூர் கிளை அலுவலக அதிகாரிகள் குழு, திருச்சி, துவாக்குடியில் அமைந்துள்ள M/s. RK Metal Roofing Private Limited நிறுவனத்தில் அமலாக்க தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த அமலாக்க நடவடிக்கை, விஞ்ஞானிE / இயக்குனர் திரு. வினித் குமார்.G, விஞ்ஞானிD / இணை இயக்குனர் திரு. ரெமித் சுரேஷ் M, மற்றும் விஞ்ஞானிC / துணை இயக்குனர் திரு. கௌதம் சந்த் சோனி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தில் பிஐஎஸ் தரநிலை முத்திரை (ISI Mark) இல்லாத ஹெக்சகனல் வாஷர் ஹெட் ட்ரில்லிங் ஸ்க்ரூக்கள் சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

சோதனை நடவடிக்கைகளின்போது, பல்வேறு அளவுகளில் உள்ள ஹெக்சகனல் வாஷர் ஹெட் ட்ரில்லிங் ஸ்க்ரூக்கள் அடங்கிய 1083 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

BIS கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு. K.ரமேஷ் இதுகுறித்து தெரிவித்ததாவது, BIS சட்டம், 2016-ன் விதிமுறைகளின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோயம்புத்தூர் கிளை அலுவலகம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், BIS சட்டம், 2016-ன் பிரிவு 29-ன் படி, முதல் முறையாக மேற்கொள்ளப்படும் இத்தகைய மீறல்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. இரண்டு லட்சத்திற்கும் குறையாத அபராதம் விதிக்கப்படலாம்; மேலும் அது உற்பத்தி செய்யப்பட்ட, விற்பனை செய்யப்பட்ட, விற்பனைக்கு வழங்கப்பட்ட அல்லது தரநிலை முத்திரையுடன் குறியிடப்பட்ட பொருட்களின் மதிப்பின் பத்து மடங்கு வரை உயர்த்தப்படலாம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

நுகர்வோர், சந்தையில் கிடைக்கும் ஹெக்சகனல் வாஷர் ஹெட் ட்ரில்லிங் ஸ்க்ரூக்களை வாங்கும் போது, அவை செல்லுபடியாகும் தர முத்திரையுடன் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொருளில் அச்சிடப்பட்டுள்ள CM/L எண்ணை பயன்படுத்தி BIS Care செயலி மூலம் உரிமத்தின் செல்லுபடியாக்தன்மையை நுகர்வோர் சரிபார்க்கலாம்.

உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், BIS சட்டம், 2016-ன் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரையின் தவறான பயன்பாடு, காலாவதியான உரிமங்களின் பயன்பாடு அல்லது பிஐஎஸ் சான்றிதழ் தொடர்பான தவறான விளக்கங்கள் ஆகியவை நுகர்வோர் பாதுகாப்பை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகவும் கருதப்படும். பிஐஎஸ் இத்தகைய மீறல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது எஸ் முத்திரையின் தவறான பயன்பாடு குறித்து பிஐஎஸ் அலுவலகத்திற்கோ அல்லது BIS Care செயலி மூலமாகவோ புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 புகார்களுக்கு, பிஐஎஸ் கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு. K.ரமேஷ் அவர்களை (0422-2245984) தொடர்புகொள்ளலாம்.

***

TV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264660) வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க: English