ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நில நிர்வாகம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதி மேலாண்மையில் ஒத்துழைப்பு குறித்து நிலவளத் துறை மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2026 4:19PM by PIB Chennai
2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' வை உருவாக்கும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நில நிர்வாகம், நில ஆவணங்களை நவீனமயமாக்குதல் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாடு ஆகிய துறைகளில், நிலவளத் துறை மேற்கொண்டு வரும் முக்கிய முன்முயற்சிகள் குறித்து அத்துறையின் செயலாளர் திரு. நரேந்திர பூஷன் எடுத்துரைத்தார்.
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிலவளத் துறை செயலாளர் திரு. நரேந்திர பூஷன், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குனர் திருமதி. மியோ ஓகா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நாட்டில் நில ஆவணங்களை நிர்வகித்தல் மற்றும் நில நிர்வாகம் ஆகிய மிக முக்கிய பொறுப்புகள் நில வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், நிலச் சொத்துக்களின் மதிப்பை முழுமையாக வெளிக் கொண்டுவரவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யவும், திறமையான நில நிர்வாகமும், நில வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதும் இன்றியமையாதவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நில நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை வலியுறுத்திய திரு. பூஷன், 'டிஜிட்டல் இந்தியா நில ஆவண நவீனமயமாக்கல் திட்டத்தின்' கீழ், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகஅவர் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'உரிமை ஆவணங்களை' டிஜிட்டல்மயமாக்கும் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளதாகவும், அதே வேளையில், நாடு முழுவதும் எழுத்துப்பூர்வ நில ஆவணங்களை நில அளவை வரைபடங்களுடன் இணைக்கும் பணியில் குறிப்பிடத்தக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் திரு. நரேந்திர பூஷன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263740®=3&lang=1
***
TV/SV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2263904)
வருகையாளர் எண்ணிக்கை : 72