சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஓய்வூதியதாரர் நலன், ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் ஊழியர்கள் நலனை மேம்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு வட்ட தொலைத்தொடர்பு கணக்கு முதன்மை கட்டுப்பாட்டு அலுவலகம் கோயம்புத்தூரில் மேற்கொண்டது

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 6:20PM by PIB Chennai

தமிழ்நாடு வட்ட தொலைத்தொடர்பு கணக்கு முதன்மை கட்டுப்பாட்டு அலுவலகம், இம்மாதத்தில் ஓய்வூதியதாரர் நலன், ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் பணியாளர் ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டது. 2026 மே 7 அன்று கோயம்புத்தூரில் குன்னூர் பிராந்திய ஓய்வூதியதாரர்களுக்காக நடத்தப்பட்ட ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமின் போது, தமிழ்நாடு வட்ட தொலைத்தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி திருமதி இந்து மாதவி, 'பி-சேவக்' கையேட்டை வெளியிட்டார். முதியவர்கள் தங்கள் குறைகளை தீர்த்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்கள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொண்ட ஒரு விளக்கக் கையேடாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சேவைகள் விரைவாக சென்றடைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்த நிகழ்வில், சுமார் 50 ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு, வங்கி விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ திரையிடப்பட்டது.

 

இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமின் போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 63 குறைகளில், 39 குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. 13 வழக்குகள் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 11 வழக்குகள் ஊதிய முரண்பாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில், உரிமம் பெற்றவர்களிடையே இணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தொலைத்தொடர்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் காலாண்டு கட்டணம் செலுத்தும் முறைகள், தொலைத்தொடர்பு சீர்திருத்தங்கள் குறித்து விளக்கப்பட்டது. அபராத நடவடிக்கைகளைத் தவிர்க்க உரிய நேரத்தில் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு உரிமம் பெற்றவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மே 12, 2026 அன்று பணியாளர் நலனுக்காக காசநோய் விழிப்புணர்வு மற்றும் பிராணாயாம முகாம் நடத்தப்பட்டது. இதில் யோகா மற்றும் முத்திரை சிகிச்சை நிபுணர் திரு வெங்கட், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் சிரிப்பு சிகிச்சை குறித்தும் விளக்கினார். டிஜிட்டல் அதிகாரம், ஒழுங்குமுறை தெளிவு, நல்வாழ்வு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் சேவை செய்வதில் இத்துறையின் பன்முக அணுகுமுறையை இந்த முன்னெடுப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

***

SS/PD/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2261120) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English