சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில் பழங்குடியினருக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 7:56PM by PIB Chennai

கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைந்து, பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் (DAPSTC – Development Action Plan for Scheduled Tribe Component) திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரட்டுபதி மற்றும் திப்பிப்பாறை பழங்குடியினருக்காக, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமினை நடத்தியது.

முகாமிற்கு தலைமை வகித்து பேசிய கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும் DAPSTC திட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய புத்திர பிரதாப், கரும்பு இனப்பெருக்கு நிறுவனமானது, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், பழங்குடியின மக்களின் தேவைகளை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் , இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார். இங்குள்ள எட்டு பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், இதுவரை இத்திட்டத்தால் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பழங்குடியினரின் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளில் ‘இரத்த சோகை, ஊடடச்சத்துப் பற்றாக்குறை மற்றும் அரிவாள் அணு சோகை’ ஆகியவை முக்கியமானவை என குறிப்பிட்ட அவர், , ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்காக கரும்பு இனப்பெருக்கு நிறுவனமானது, தொடர்ந்து தரமான வீட்டுத் தோட்ட விதைகள், திரவ வெல்லம் மற்றும் சிறுதானிய விதைகளை விநியோகித்து வருவதாகக் தெரிவித்தார் .
வாழ்த்துரை வழங்கிய அமராவதிநகர் வனச் சரக அலுவலர் திரு புகழேந்தி 2021-ல், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஆறு குடியிருப்புகளில், இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பழங்குடியினர் நலனுக்காக கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார்.
கரட்டுப்பதி குடியிருப்பைச் சேர்ந்த திரு கருப்புசாமி மற்றும் திப்பிப்பாறை குடியிருப்பைச் சேர்ந்த திருமதி வெள்ளையம்மாள் ஆகிய பழங்குடியின பிரதிநிதிகள் உரையாற்றுகையில், இந்த முகாமானது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பிரச்சினைகள் குறித்த சமூக விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
பின்னர் நடைபெற்ற பயிற்சி அமர்வில் , கோயம்புத்தூர், பிஎஸ்ஜி மருத்துவமனைகளின் பொது மருத்துவப் பிரிவு மருத்துவர் ஹரி ஈஸ்வர், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த கலந்துரையாடல் அமர்வை நடத்தினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் சரஸ்வதி ஈஸ்வரன் சத்தான சிறுதானிய உணவுப் பொருட்களை தயாரிக்கும் சமையல் குறிப்புகள் குறித்து பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி அளித்ததுடன், சுயஉதவிக் குழுக்கள் மூலம் சிறுதானியப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதலை மேற்கொள்ளுமாறு பழங்குடியினப் பெண்களை ஊக்குவித்தார். தொடர்ந்து கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி கோபி சிப்பிக் காளான் வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப அமர்வை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்ற கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின ஆண்களும் பெண்களும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, தங்கள் சமூகங்களில் உள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.
முகாமில், புகையில்லா அடுப்புகள், விவசாயக் கருவிகள், திரவ வெல்லம் மற்றும் தார்ப்பாய்கள் போன்ற பல பயனுள்ள பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
முன்னதாக, ஆனைமலை புலிகள் காப்பக வனவர் திரு செந்தில் முருகன் வரவேற்புரை வழங்கினார். கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானி மோகன்ராஜ் நன்றியுரை வழங்கினார்.
****
TV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260840)
வருகையாளர் எண்ணிக்கை : 14