மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் போட்டித் திட்டத்தின் தொடக்க விழாவில், அதன் இயக்குநர் பேராசிரியர் திரு பாலாஜி ராமகிருஷ்னன் இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
"மாணவர் தன்னியக்க நீர்மூழ்கி வாகன போட்டி" என்ற பெயரில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டி, தேசிய மாணவர் போட்டித் திட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. முன்மாதிரி முயற்சியாக 2011-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த போட்டி, நீர்மூழ்கி தொழில்நுட்பத் துறையில் திறன் மேம்பாட்டுக்கான தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டி திறன்வாய்ந்த பொறியியல் மாணவர்களை நீர்மூழ்கி தொழில்நுட்பத்தில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும், கடல்சார் பயன்பாடுகளுக்கான புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் உத்வேகம் அளிக்கிறது. இப்போட்டி முற்றிலும் இளநிலைப் பொறியியல் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டியாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி, தன்னியக்க நீர்மூழ்கி வாகனங்களுக்கான வடிவமைப்பு குறித்த கருத்தாக்கம் மற்றும் அதன் உருவாக்கம் போன்ற அம்சங்களில் நடைபெறும்.
2011-ம் ஆண்டு இந்தப்போட்டி தொடங்கிய நிலையில், 279 மாணவர் குழுக்கள் பதிவு செய்திருந்தன. இதில் 147 குழுக்கள் முதல்நிலை வடிவமைப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. அவற்றில் 80 குழுக்கள் கருத்தாக்க வடிவமைப்பு அறிக்கை வழங்கியுள்ளதுடன், 40 குழுக்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன.
இதுவரை, இந்தியாவில் 40 தன்னியக்க நீர்மூழ்கி வாகனங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடல் மற்றும் நீர்மூழ்கி தொழில்நுட்பங்களில் அறிவும் அனுபவமும் பெற்றுள்ளனர்.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமை
தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிதியுதவியுடன் திறமையான இந்திய மாணவ குழுக்கள் அமெரிக்காவின் சான்டியாகோவில் நடைபெறும் சர்வதேச ரோபோசப் போட்டியில் பங்கேற்று சர்வதேச அரங்கில் தங்களது திறமையை நிரூபித்தன.
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கரக்பூர் — 2011
- பணிமலர் பொறியியல் கல்லூரி, சென்னை — 2012
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ் — 2014
- எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், சென்னை — 2015
- இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை — 2017
- இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை மற்றும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ரூர்க்கேலா — 2019
இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும் குழுக்களுக்கு, வடிவமைப்பு, தயாரிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் கள சோதனைக்காக ஒவ்வொரு நிறுவனம் / குழுவிற்கு தலா ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
இப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெறும் மாணவர் குழுவிற்கு ரூ.1,00,000 இரண்டாம் இடம் பெறும் மாணவர் குழுவிற்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
***
SS/SV/RJ/SH