சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் புதிய ஆதார் சேவை மையம் தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 5:09PM by PIB Chennai
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், கிருஷ்ணகிரியில் மக்களை மையமாகக் கொண்ட ஆதார் சேவைகளை வலுப்படுத்தும் வகையில் ஆசாத் நகரில் புதிய ஆதார் சேவை மையத்தை இன்று முதல் (12.05.2026 - செவ்வாய்க்கிழமை) செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு சி. தினேஷ் குமார் திறந்து வைத்தார்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அந்த அலுவலக அதிகாரிகள், பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன், ஆதார் சேவை மைய பணியாளர்கள் மற்றும் சேவை வழங்குநரான பிஎல்எஸ் சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த ஆதார் சேவை மையத்தில் ஆதார் பதிவு, மக்கள் தொகை விவரங்கள், பயோமெட்ரிக் முறையிலான தகவல் புதுப்பித்தல், பிழை திருத்தம், குறைதீர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதார் சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இந்த மையம் அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு கூடுதல் வசதியும் மேம்பட்ட சேவை அனுபவமும் கிடைக்கும்.

மேலும், ஆன்லைன் முன்பதிவு முறை மற்றும் ஆதார் சேவைகள் வழங்கப்படும் நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு சி. தினேஷ் குமார் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சென்னை, மதுரைக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் மூன்றாவது ஆதார் சேவை மையம் தற்போது கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணைய பெங்களூரு அலுவலக மண்டலத்தின் துணை இயக்குநர் திருமதி பிரியா ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் கூடுதலாக 27 ஆதார் சேவை மையங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு சேவை வரும் செப்டம்பர் மாதம் வரை சேவை கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இந்த சேவை பள்ளிகளில் நடத்தப்படும் முகாம்கள் மற்றும் ஆதார் சேவை மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
***
SS/SV/RJ/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2260340)
வருகையாளர் எண்ணிக்கை : 111