சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிஐஎஸ்-ல் புதிய உரிமம் பெற்றவர்களுக்கான “கலந்துரையாடல்” - விழிப்புணர்வு நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 1:49PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தரநிலை அமைப்பான இந்திய தரநிர்ணய அமைவனம் சார்பில், சென்னையில் உள்ள அதன் கிளை அலுவலகம், தரமணி, சிஐடி வளாகத்தில், புதிய உரிமம் பெற்றவர்களுக்கான “கலந்துரையாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சி”யை நடத்தியது. 2026 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிஐஎஸ் உரிமம் வழங்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அதற்கான உரிமச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பிஐஎஸ் அமைப்பின் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி-எப் / முதுநிலை இயக்குனர் & தலைவருமான திரு எஸ் டி தயானந்த் ஆற்றிய வரவேற்புரையுடன் இந்த  நிகழ்ச்சித் தொடங்கியது.  புதிய உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களுக்கு வரவேற்பு தெரிவித்த அவர், இந்தியத் தரநிலைகள், உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் அடித்தளமாக விளங்குகின்றன என்பதை குறிப்பிட்டார். மேலும், உற்பத்தியாளர்கள் சம்பந்தப்பட்ட இந்தியத் தரநிலைகள் மற்றும் பிஐஎஸ் உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தரநிலைகள் மற்றும் இணக்க மதிப்பீட்டு தேவைகளை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், நுகர்வோரின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில், இந்தியப் பொருட்களின் நம்பகத்தன்மையை வலுவடையச் செய்து, “தரமான இந்தியத் தயாரிப்புகள்” என்ற நிலையை எட்ட உதவிடும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், மூன்றாம் தரப்பினருக்கு உத்தரவாதம்  வழங்குவதால், உற்பத்தியாளர்கள் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், பிஐஎஸ் சட்டம் 2016, பிரிவு 28-ன் கீழ், கட்டாய பிஐஎஸ் தரநிலை முத்திரை இன்றி சேமித்து வைக்கப்படும், விநியோகிக்கப்படும் அல்லது விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக, தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அமலாக்க நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார். தரநிலைகளுக்கு இணங்காத பொருட்களின் விற்பனையைத் தடுக்கவும், நுகர்வோர் நலனை பாதுகாக்கவும், கட்டாய சான்றிதழ் நடைமுறைகள் அனைத்துத் துறைகளிலும் திறம்பட அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திரு எஸ் டி தயானந்த் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விஞ்ஞானி-சி / துணை இயக்குநர் திரு. பக்கி பாலு, மற்றும் திரு. ஹிதேஷ் யாதவ், ஆகியோர் உரையாற்றினார். பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம் நடத்திய தொழில்நுட்ப அமர்வுகளில், உரிமம் தொடர்பான இணக்க நடைமுறைகள், தரநிலை முத்திரை பயன்படுத்தும் விதிமுறைகள் மற்றும் உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இந்தியத் தரநிலைகளை பரவலாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தரநிலையாக்கம், தர விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தொழில்துறைகளின் பங்கு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதிய உரிமம் பெற்றவர்களுக்கு வரவேற்புத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், பங்கேற்பாளர்கள் பிஐஎஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, சான்றிதழ், இணக்கம் மற்றும் தரநிலையாக்க நடவடிக்கைகள் தொடர்பான தங்களது சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவில், புதிதாக சான்றளிக்கப்பட்ட 30 தொழில்துறைகளின் பிரதிநிதிகளுக்கு, பிஐஎஸ் உரிமச் சான்றிதழ்களை திரு. தயானந்த் வழங்கினார்.

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259339) வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க: English