பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படைக்கான ஐந்தாவது ஆதரவுக் கப்பலை உருவாக்குவதற்கு எஃகு வெட்டும் பணிகள் துவங்கின
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2026 7:59PM by PIB Chennai
ஐந்து கடற்படை ஆதரவுக் கப்பல்களில் (FSS) ஐந்தாவது மற்றும் இறுதி கப்பலுக்கான ‘எஃகு வெட்டும்’ பணி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையகப்படுத்துதல் பிரிவின் கட்டுப்பாட்டு அலுவலர் வைஸ் அட்மிரல் சஞ்சய் சாது முன்னிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) நிறுவனத்தில் இன்று (08.05.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹெச்எஸ்எல்-இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், இந்திய கடற்படை மற்றும் ஹெச்எஸ்எல்-ஐச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தியக் கடற்படை, ஐந்து கடற்படை ஆதரவுக் கப்பல்களை வாங்குவதற்காக ஆகஸ்ட் 2023-இல் ஹெச்எஸ்எல் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது; அவற்றின் விநியோகம் 2027-ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கும்.
கடற்படையில் சேர்க்கப்படும்போது, கடற்படை ஆதரவுக் கப்பல்கள், கடலில் உள்ள கடற்படைக் கப்பல்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதன் மூலம் இந்தியக் கடற்படையின் ஆழ்கடல் திறன்களை வலுப்படுத்தும். சுமார் 40,000 டன் திறன் கொண்ட இந்தக் கப்பல்கள், எரிபொருள், தண்ணீர், வெடிமருந்துகள் மற்றும் இதர பொருட்களை வழங்குவதன் மூலம் கடற்படைக் கப்பல்களை நீண்ட காலம் பணியில் ஈடுபடுத்த வழிவகுக்கும். இதன்மூலம், கடற்படையின் உத்திசார் அணுகல் மற்றும் இயங்குதிறன் மேம்படுத்தப்படும். மேலும், இந்தக் கப்பல்கள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாக வழங்குவதற்கும், பணியாளர்களை வெளியேற்றுவதற்கும் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும்.
முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாலும், பெரும்பாலான உபகரணங்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்தே பெறுவதாலும், இந்தக் கடற்படை ஆதரவுக் கப்பல் திட்டம், மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி செய்தல் மற்றும் உலகிற்காக உற்பத்தி செய்தல் போன்ற முன்முயற்சிகளுக்கு இணங்க, இந்தியக் கப்பல் கட்டும் தொழில்துறையை மேம்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259193®=3&lang=1
(Release ID: 2259193)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259220)
வருகையாளர் எண்ணிக்கை : 10