சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியக் கண்டுபிடிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் வகையில், கலிபோர்னியாவில் 7.5 மில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்நுட்ப மையம் - ஐஐடி மெட்ராஸ் சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளை
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2026 3:49PM by PIB Chennai

ஐஐடி மெட்ராஸ் உயர் கல்வி நிறுவனத்தின் சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள மென்லோ பார்க்கில், முதலாவது மையத்தை 2026 மே 6-ந் தேதி அன்று நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை உலகளவில் விரிவுபடுத்துவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். 'செலக்ட் யுஎஸ்ஏ' முதலீட்டு உச்சிமாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஐஐடி எனப்படும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே, முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகக் கருதப்படும் இத்திட்டம், இந்திய ஆராய்ச்சி, புத்தொழில் நிறுவனங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நேரடியாக சர்வதேச சந்தைகளுக்கும், புத்தாக்க மையங்களுக்கும் கொண்டு செல்வதற்கான உத்திசார் மாற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
2026 ஏப்ரல் 24 அன்று தொடங்கப்பட்ட இந்த மையம், 'சிஏ ஸ்டார்ட்அப்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ளதுடன், ஐஐடி மெட்ராஸ் குளோபல் அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை உறுதிப்படுத்துகிறது.
இது குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் மற்றும் ஐஐடிஎம் குளோபலின் தலைவரான பேராசிரியர் வி காமகோடி, இது “இந்திய ஆராய்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையாகும் என்றார். மென்லோ பார்க் மையம், சர்வதேச அளவில் தொழில்துறை தலைவர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் மூலதன அமைப்புகள் ஆகியவற்றுடன் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்தி, நவீன புத்தாக்கம், திறமைப் பரிமாற்றத்தை மேம்படுத்தும்” என்று அவர் கூறினார்.

மொத்தம் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான திட்டமிடப்பட்ட முதலீட்டில் இந்த மையம் உருவாக்கப்படும். இதில் ஐஐடிஎம் குளோபல் நிறுவனத்தின் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் புதிய முதலீடும் அடங்கும். சிலிக்கான் வேலிக்கு அருகிலுள்ள முக்கிய இடத்தில் அமைந்துள்ள இம்மையம், இந்திய தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் உலகளாவிய மூலதனம், சந்தைகள், வழிகாட்டுதல், கூட்டாண்மைகள் போன்றவற்றைப் பெறுவதற்கான தொடக்கத் தளமாக விளங்கும்.
இம்மையம் குறித்துப் பேசிய ஐஐடிஎம் குளோபல் இயக்குநர் பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி, பயன்பாட்டு ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தவும், இந்தியா- அமெரிக்கா இடையே நீடித்த ஒத்துழைப்பை உருவாக்கவும் இது உதவிடும் என்று தெரிவித்தார்.
தடையற்ற புத்தாக்க வழித்தடத்தை உருவாக்குவதை இந்த மையம் நோக்கமாக கொண்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸ் டீன் (சர்வதேச தொடர்புகள்) மற்றும் ஐஐடிஎம் குளோபல் இயக்குநர் பேராசிரியர் ப்ரீத்தி அகலாயம் தெரிவித்தார்.
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259122)
வருகையாளர் எண்ணிக்கை : 15