சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிஐஎஸ் சோதனையில் தரமற்ற பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAY 2026 8:20PM by PIB Chennai

'

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு, 06 மே 2026 அன்று, சென்னை சௌகார்பேட்டையில் அமைந்துள்ள பின்வரும் மூன்று கடைகளில் தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது: (1) M/s Ambika Stores, எண் 63, நாராயண முதலித் தெரு, சௌகார்பேட்டை, சென்னை; (2) M/s Mahaveer Enterprises, எண் 40, நாராயண முதலித் தெரு, சௌகார்பேட்டை, சென்னை; மற்றும் (3) M/s Shetrapal Impex, முதல் மாடி, எண் 43, பகவான் காம்ப்ளக்ஸ், ரத்தன் பஜார், சென்னை. இந்த நிறுவனங்களில், கட்டாய பிஐஎஸ் தரநிலை முத்திரை (ISI Mark) இல்லாத விளையாட்டு பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. .

சோதனை நடவடிக்கைகளின்போது, குழந்தைகள் பயன்படுத்தும் பல்வேறு வகையான விளையாட்டு பொருட்கள் மற்றும் பலூன்கள் கட்டாய பிஐஎஸ் தரநிலை முத்திரை மற்றும் பிஐஎஸ் உரிம எண் இன்றி சேமித்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

 

மேற்கண்ட மூன்று கடைகளில் நடைபெற்ற தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின்போது, சுமார் 2,870 பலூன் பாக்கெட்டுகள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான விளையாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கை குறித்து பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குனர் மற்றும் தலைவர் திரு.S.D. தயானந்த் கூறுகையில், நுகர்வோர் நலனை பாதுகாக்கவும், சந்தையில் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகள் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான இந்திய தரநிலைகளுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  குறிப்பாக குழந்தைகளை தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற தயாரிப்புகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறுதல், கட்டாய BIS சான்றிதழ் இல்லாத தயாரிப்புகளை விற்பனை செய்தல் அல்லது சேமித்து வைத்தல் ஆகியவை  கடுமையான குற்றங்களாகும் என்றும் தெரிவித்தார். விதிமுறைகளை பின்பற்றச் செய்வதற்கும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பறிமுதல் மற்றும் வழக்குப்பதிவு உள்ளிட்ட கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை பிஐஎஸ் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 இந்த குற்றத்திற்கு, குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. இரண்டு லட்சம் வரை அபராதம் அல்லது பொருட்களின் மதிப்பில் 10 மடங்கு அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம்.

 

நுகர்வோர், கட்டாய சான்றிதழ் வழங்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கும் போது, அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்த்த பின்னரே வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பிஐஎஸ் உரிமங்கள் மற்றும் பதிவுகளை BIS Care செயலி, இணையதளம் அல்லது பொருத்தமான இடங்களில் க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் சரிபார்க்கலாம். ஐஎஸ்ஐ முத்திரையின் தவறான பயன்பாடு, ஹால்மார்கிங் விதிமுறை மீறல்கள் அல்லது சான்றிதழ் பெறாத தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான புகார்களை BIS Care செயலி மூலமாகவோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவல்களுக்கு www.bis.gov.in மற்றும் e-BIS portal manakonline.in இணையதளங்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2258869) வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க: English