சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி ₹72,000 கோடியை கடந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 21 APR 2026 7:34PM by PIB Chennai

கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகளின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி சாதனை அளவாக ₹72,325.82 கோடியை (8.28 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியுள்ளதுடன், அதன் அளவு 19.32 லட்சம் மெட்ரிக் டன்களாக உயர்ந்துள்ளது. மொத்த ஏற்றுமதி வருவாயில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலாக, அதாவது ₹47,973.13 கோடி (5.51 பில்லியன் அமெரிக்க டாலர்) பங்களிப்புடன் உறைவிக்கப்பட்ட இறால் முக்கிய வளர்ச்சி காரணியாகத் திகழ்கிறது. இறால் ஏற்றுமதி அளவில் 4.6% மற்றும் மதிப்பில் 6.35% வளர்ச்சியடைந்து, இந்தியாவின் கடல் பொருட்கள் ஏற்றுமதியில் தனது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா 2.32 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இறக்குமதியுடன் தொடர்ந்து மிகப்பெரிய ஏற்றுமதி இடமாகத் திகழ்கிறது. இருப்பினும், பரஸ்பர வரி விதிப்புகளின் தாக்கத்தால் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி அளவில் 19.8% மற்றும் மதிப்பில் 14.5% சரிவைக் கண்டுள்ளது. இந்த சரிவை சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வலுவான வளர்ச்சி ஈடுசெய்துள்ளது. இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமான சீனாவிற்கான ஏற்றுமதி மதிப்பில் 22.7% மற்றும் அளவில் 20.1% அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மதிப்பில் 37.9% மற்றும் அளவில் 35.2% என வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவும் மதிப்பில் 36.1% மற்றும் அளவில் 28.2% என குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

ஜப்பானுக்கான ஏற்றுமதி மதிப்பில் 6.55% வளர்ச்சியடைந்த நிலையில், மேற்காசியாவிற்கான ஏற்றுமதி நிதியாண்டின் இறுதியில் ஏற்பட்ட  பதற்றங்களால் 0.55% சிறிய சரிவைக் கண்டுள்ளது. பல தனிப்பட்ட சந்தைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன, இது பாரம்பரிய சந்தைகளில் நிலவும் வர்த்தகச் சவால்களுக்கு மத்தியில் சந்தைப் பல்வகைப்படுத்தலை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது. தயாரிப்புகளைப் பொறுத்தவரை, உறைவிக்கப்பட்ட மீன், ஊசிக்கணவாய் (Squid),  கணவாய்  (Cuttlefish), உலர்த்தப்பட்ட மீன் வகைகள் (Dry Fish) மற்றும் உயிருள்ள கடல் வாழ் உயிரினங்களின் (Live Fish) ஏற்றுமதி நேர்மறையான வளர்ச்சியைப் பெற்றுள்ளன, அதேசமயம் குளிர்விக்கப்பட்ட மீன்கள் (Chilled Fish) சரிவைக் கண்டுள்ளன. சுரிமி (Surimi), மீன் உணவு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதி மேம்பட்ட செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. தளவாடங்களைப் பொறுத்தவரை, விசாகப்பட்டினம், ஜே.என்.பி.டி (JNPT), கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முதல் ஐந்து துறைமுகங்கள் மொத்த ஏற்றுமதி மதிப்பில் 64% பங்கைக் கொண்டுள்ளன, இது இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி விநியோகச் சங்கிலியில் அவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

*

TV/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2254262) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English