சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், இந்தியாவிலேயே முதன்முறையாக ‘ஒமேகாபால்’ (OmegaBall) என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
17 APR 2026 7:52PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), முன்னோடி முயற்சியாக ஒமேகாபால் என்னும் விளையாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இதன்மூலம் இந்த விளையாட்டு முதன்முறையாக இந்தியாவில் நுழைகிறது. இந்த வரலாற்று சாதனையையொட்டி, விளையாட்டின் வளர்ச்சியையும் பரவலான பயன்பாட்டையும் முன்னெடுக்கும் வகையில் தேசிய அளவிலான ஐஐடி மெட்ராஸ் ஒமேகாபால் கிளப்பை அமைக்க ஐஐடி மெட்ராஸ் திட்டமிட்டுள்ளது.
இதன் தொடக்க நிகழ்வாக, ஐஐடி மெட்ராஸ் ஜிம்கானாவும் டீன் அலுவலகமும் (மாணவர்கள்) இணைந்து, கல்லூரிகளுக்கு இடையிலான ஓமேகாபால் போட்டியை இக்கல்வி நிறுவன வளாகத்தின் கால்பந்து மைதானத்தில் இன்று (17 ஏப்ரல் 2026) நடத்தியது.
இந்தப் போட்டியில் சென்னையின் முக்கிய கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. லயோலா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், புதுக் கல்லூரி, நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சவீதா பல்கலைக்கழகம், ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட அணிகளுடன், ஐஐடி மெட்ராஸ்-ன் ஆரஞ்சு, ப்ளூ அணிகள் கலந்துகொண்டன.
ஓமேகாபால் என்பது கால்பந்தின் வேகமான மற்றும் புதுமையான மாறுபாடு ஆகும். இது வட்ட வடிவிலான மைதானத்தில் மூன்று அணிகள் மூன்று கோல்களுடன் விளையாடப்படும் விளையாட்டு. ஒவ்வொரு அணியும் இரண்டு கோல்களைத் தாக்கி, ஒரு கோலைப் பாதுகாக்கும் விதத்தில் விளையாடப்படுகிறது. தொடர்ச்சியான ஆட்டம், அதிக ஸ்கோரிங் மற்றும் பார்வையாளர்களின் அதிக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகிறது. பாரம்பரிய கால்பந்து வடிவங்களுக்கு நவீன மாற்றாக ஓமேகாபால் உருவெடுத்து வருகிறது.
ஒமேகாபால் போட்டியை ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி, இன்று (17 ஏப்ரல் 2026) இக்கல்வி நிறுவன வளாகத்தில் தொடங்கி வைத்தார். ஐஐடி மெட்ராஸ் மாணவர் நலத்துறை டீன் பேராசிரியர் சத்யநாராயணா என் கும்மாடி, விளையாட்டுத் துறை ஆலோசகர் பேராசிரியர் ஸ்ருதி துபே, விளையாட்டுத் துறை இணை ஆலோசகர் பேராசிரியர் சுதாகரன் சந்திரன், பேராசிரியர்கள், மாணவர்கள், சென்னை முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த அணிகளைச் சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டிலேயே முதன்முறையாக ஐஐடி-க்களில் விளையாட்டு வீர்ர்களுக்கான மாணவர் சேர்க்கையை அறிமுகப்படுத்தியது ஐஐடி மெட்ராஸ்தான் என்பதை நினைவுகூர்ந்த அதன் இயக்குனர் பேராசிரியர் வி. காமகோடி தொடக்க நிகழ்வில் மேலும் கூறும்போது, "ஐஐடி மெட்ராஸ்-ன் தனித்துவமான கண்டுபிடிப்பு மற்றும் புதுமைச் சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஒமேகாபால் அமைந்துள்ளது. இந்தியாவில் புதிய மற்றும் துடிப்பான விளையாட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், மாணவர்களின் பங்களிப்பிற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, நாட்டின் விளையாட்டு கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கும் நாங்கள் பங்களிக்கிறோம். இதுபோன்ற முயற்சிகள் இளைஞர்களின் பங்கேற்பைத் தூண்டும், விளையாட்டில் படைப்பாற்றலை ஊக்குவிப்பதுடன், வளர்ந்து வரும் உலகளாவிய விளையாட்டுப் போக்குகளுடன் இந்தியா இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்யநாராயணா என். கும்மாடி கூறுகையில், "மாணவர்களின் பன்முகத் திறனை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களது வளாக விளையாட்டுச் சூழலில் ஒமேகாபால் உற்சாகமான வரவாகும். பந்தைக் கையாளும் அதிக நேரம், விளையாட்டின் வேகம் காரணமாக இந்த விளையாட்டிற்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் முன்மொழிந்துள்ள 'ஒமேகாபால் கிளப்', வரவிருக்கும் போட்டிகள் ஆகியவற்றின் மூலம், திறமைகளை வளர்க்கவும், போட்டிகளுக்கான அனுபவத்தை வழங்கவும் இலக்கு வைத்துள்ளோம். இதன் மூலம் எதிர்காலத்தில் சர்வதேச அரங்குகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்க விரும்புகிறோம்" எனக் குறிப்பிட்டார்.
விளையாட்டு விதிமுறைகளின்படி, ஒமேகாபால் சுமார் 50-55 மீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவ மைதானத்தில் விளையாடப்படுகிறது. இதில் மூன்று கோல்கள் 120 டிகிரி இடைவெளியில் அமைக்கப்பட்டு சுறுசுறுப்பான விளையாட்டுச் சூழலை உருவாக்குகிறது. தலா 13 நிமிடங்கள் கொண்ட மூன்று சுற்றுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 'ஆஃப்சைட்' விதிமுறை கிடையாது என்பதால், ஆட்டம் மிகவும் சாதாரணமாகவும் அதிரடியாகவும் அமைகிறது.
இந்த புதிய முயற்சியின் ஒருபகுதியாக ஐஐடி மெட்ராஸ் ஒமேகாபால் கிளப், தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும். இதன் மூலம், ஐஐடி மெட்ராஸ் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தி, ஒமேகாபால் போட்டியை நடத்திய இந்தியாவின் முதல் கல்வி நிறுவனம் என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பெறும். விளையாட்டுத் துறையில் புதுமையான முறைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், இளைஞர்களின் அதிகப்படியான பங்கேற்பைத் தூண்டுவதையும் இம்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் மாணவர்களுக்கு ஏற்கனவே ஒமேகாபால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ 100 மாணவர்கள் இதன் செயல்முறை விளக்கப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். மாணவர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவர்கள் இந்த விளையாட்டில் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளவும், வருங்காலத்தில் சர்வதேசப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்புகளை வழங்கவும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியின் மூலம், இந்தியாவில் வளர்ந்துவரும் விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும் முன்னிலை வகிப்பதோடு, புதுமை, உள்ளடக்கிய வளர்ச்சி, மாணவர்களின் பங்கேற்பு ஆர்வம் ஆகியவற்றை மேம்படுத்துவதையும் ஐஐடி மெட்ராஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.
****
TV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2253125)
வருகையாளர் எண்ணிக்கை : 76