சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜிப்மரில் இரண்டு நாள் “அடிப்படை இலிசரோவ் பயிற்சி பட்டறை” வெற்றிகரமாக நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2026 1:25PM by PIB Chennai
ஜிப்மர் எலும்பியல் துறை சார்பில் இரண்டு நாள் “அடிப்படை இலிசரோவ் பயிற்சி பட்டறை” வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வு தென்னிந்தியாவில் மேம்பட்ட எலும்பியல் பயிற்சிக்கான முக்கிய கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை நிகழ்வாக அமைந்தது.

இந்த பயிற்சி பட்டறை, ஜிப்மர் எலும்பியல் துறை மூலம், துறைத் தலைவர் டாக்டர் சுரேஷ் காந்தி பி. அவர்களின் தலைமையிலும், டாக்டர் பசுபதி பி. அவர்களின் ஒருங்கிணைப்பிலும் சிறப்பாக நடத்தப்பட்டது. தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 50 இளம் எலும்பியல் மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் இதில் பங்கேற்றனர். விரிவுரைகள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வில், பங்கேற்பாளர்கள் நிபுணர்களுடன் நேரடியாக கலந்துரையாடி இலிசரோவ் முறையின் நடைமுறை பயன்பாடுகளை ஆழமாக அறிந்தனர். இந்த நிகழ்வின் சிறப்பான நடைமுறைப்படுத்தல், எலும்பியல் துறை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பையும் ஒருங்கிணைப்புத் திறனையும் வெளிப்படுத்தியது.
இந்த பயிற்சியில் நாடு முழுவதும் இருந்து 10 முன்னணி நிபுணர்கள் ஆசிரியர்களாக பங்கேற்றனர். குறிப்பாக மும்பையைச் சேர்ந்த டாக்டர் மங்கள்பாரிஹார் மற்றும் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் வாசுதேவன் பி. என். ஆகியோர் முதன்மை ஆசிரியர்களாக இருந்து தங்கள் விரிவான அனுபவத்தை பகிர்ந்தனர்.
“இலிசரோவ் முறை” என்பது எலும்புகளை மீண்டும் உருவாக்க, நீளத்தை அதிகரிக்க மற்றும் வளைவு/வடிவ மாற்றங்களைச் சரிசெய்ய பயன்படும் ஒரு சிறப்பு எலும்பியல் சிகிச்சை முறை ஆகும். இதில் வளைய வடிவ வெளிப்புற கருவிகள் (ரிங், கம்பி, ராட் போன்றவை) உடலின் வெளியே பொருத்தப்பட்டு, மெதுவாக கட்டுப்படுத்தப்பட்ட இழுப்புச் சக்தி வழங்கப்படுகிறது. இதன் மூலம் புதிய எலும்பு வளர்ச்சி தூண்டப்படுகிறது; இதை ‘Distraction Osteogenesis’ என அழைக்கப்படுகிறது. இந்த முறையை ரஷ்ய மருத்துவர் கவ்ரியல் இலிசரோவ் உருவாக்கினார். சிக்கலான எலும்பு முறிவுகள், ஆறாத எலும்புகள், அங்க நீள வேறுபாடு மற்றும் வடிவ மாற்றங்கள் போன்ற சிகிச்சைகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த பயிற்சி பட்டறை, சிக்கலான எலும்பு முறிவுகள், அங்க வடிவ மாற்றங்கள் மற்றும் அங்க நீள வேறுபாடுகளைச் சிகிச்சையளிக்கும் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. இத்தகைய பயிற்சிகள் மூலம் இளம் மருத்துவர்களின் திறன் மேம்பட்டு, பொதுமக்களுக்கு மேம்பட்ட எலும்பியல் சிகிச்சைகள் எளிதில் கிடைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்மர் எலும்பியல் துறை, இவ்வகை அடிப்படைப் பயிற்சிகளில் இருந்து தொடங்கி, எதிர்காலத்தில் மேம்பட்ட உயரிய பயிற்சிகளை அளித்து, எலும்பியல் துறையில் மருத்துவர்களின் நிபுணத்துவத்தை மேலும் வலுப்படுத்த உறுதியாக உள்ளது. இது அங்க மறுசீரமைப்பு மற்றும் வடிவ திருத்த சிகிச்சைகளில் மருத்துவர்களின் திறன் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியாகும்.
***
AD/TV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2248928)
வருகையாளர் எண்ணிக்கை : 66