சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், வைரத் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் ஆராய்ச்சியை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAR 2026 1:40PM by PIB Chennai
ஐஐடி மெட்ராஸ்-ன் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்திற்கான இந்திய மைய (India Centre for Lab Grown Diamond – InCent-LGD) ஆராய்ச்சி குழு, வைரத்தைப் பயன்படுத்தி குவாண்டம் தொழில்நுட்பம், போட்டோனிக்ஸ், சென்சிங், மெட்ராலஜி ஆகிய துறைகளில் இந்தியாவின் ஆராய்ச்சியை உலக அரங்கிற்கு கொண்டு செல்கிறது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட இந்த ஆய்வுக் குழு, உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம், ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரத்தொழில் துறையில் இந்தியாவை உலகளவில் முன்னணி நாடாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், இந்திய ஸ்டார்ட்-அப் களுக்கும் தொழில்துறைக்கும் பயன்படுத்தப்படும். இதன் மூலம், ரத்தினத் தரம், மின்னணு தரத்திலான வைரங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா சுயசார்பு பெறும். தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி, ஏற்றுமதியை உயர்த்தி, புத்தாக்கம், தொழில் முனைவுத்திறன் ஆகியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்கள், பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படுவதற்குப் பதிலாக, தொழில்நுட்ப செயல்முறையின் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவை இயற்கை வைரங்களின் இயற்பியல், இரசாயன, ஒளியியல் பண்புகளையே கொண்டுள்ளன. இருப்பினும், இவ்வகை வைரங்கள் நகை- ஆபரணங்களைத் தவிர பிற பயன்பாடுகளுக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளன.
இந்த ஆராய்ச்சி குழு, “வைரம் மற்றும் வளர்ந்துவரும் பொருட்கள்- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு (iCDEM 2026)” என்ற சர்வதேச மாநாட்டை 2026 மார்ச் 11 முதல் 13ந் தேதி வரை ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடத்தியது. இந்த மாநாடு வைர அறிவியல், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் அடுத்த தலைமுறை மின்னணு பொருட்களில் முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட உலகளாவிய மேடையாக அமைந்தது. வைரத்தின் சிறந்த வெப்ப கடத்துத்திறன், கதிர்வீச்சு எதிர்ப்புத் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தும் வகையில், எரிசக்தி, விண்வெளி, ப்யூசன் சார்ந்த பயன்பாடுகளுக்கு வைரத்தையும் கார்பன் பொருட்களையும் பயன்படுத்துவது இம்மாநாட்டின் முக்கிய மையமாக இருந்தது.
பொருள் அறிவியல், மின்னணுவியல், குவாண்டம் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணியாற்றும் ஏறத்தாழ 250 சர்வதேச மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (GJEPC) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மாநாடு, வைரம் மற்றும் வளர்ந்து வரும் பொருட்கள் சார்ந்த தொழில்நுட்பங்களுக்காகவே பிரத்யேகமாக இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் நிகழ்வாகும்.
துல்லியம், அளவிடக்கூடிய தன்மை, தொழில்துறை பொருத்தத்தை உறுதி செய்வதற்காக, வைரங்கள் மற்றும் கார்பன் சார்ந்த பொருட்களின் உற்பத்தி முறைகளை மேம்படுத்த மாடலிங், சிமுலேஷன் மற்றும் ஏஐ/எம்எல்-மூலம் கண்காணிக்கப்படும் நுட்பங்கள் போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உள்ளடக்குவதிலும் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.
இந்த வகையான மாநாடுகளின் அவசியத்தை வலியுறுத்தி, எம்எஸ் ராமச்சந்திரராவ், InCent-LGD, ஐஐடி மெட்ராஸ் முதன்மை ஆய்வாளர் கூறும்போது, “எங்கள் ஆராய்ச்சிக் குழுவின் நோக்கம், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத் தொழில்நுட்பங்களுக்கான நவீன வசதிகளை உருவாக்கும் தேசிய மையத்தை நிறுவுவதாகும். இது உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் மூலம் வைர வளர்ச்சி செயல்முறைகளை மேம்படுத்த உதவும். மேலும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத் துறைக்கு தேவையான மனிதவளத்தை உருவாக்கும் பயிற்சி பாடத்திட்டங்களையும் விரைவில் வழங்கத் தொடங்குவோம். iCDEM 2026 போன்ற உலகளாவிய மாநாடுகள், இந்திய ஆராய்ச்சியாளர்கள் உலகின் சிறந்த விஞ்ஞானிகளிடமிருந்து கற்றுக்கொண்டு, இந்திய தொழில்நுட்பங்களை முன்னேற்றுவதற்கு மிக முக்கியமானவை” எனத் தெரிவித்தார்.
மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய iCDEM 2026 தலைவரும் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியருமான எம்.எஸ். ராமச்சந்திரராவ், அடுத்த iCDEM-2027 மாநாடு 2027 ஜனவரி 27 முதல் 29ந் தேதிவரை வரை ஐஐடி மெட்ராஸ்-ல் நடைபெறும் என்று அறிவித்தார்.
InCent-LGD-இல் நடைபெற்று வரும் ஆராய்ச்சியை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் இயந்திர பொறியியல் துறை இணை முதன்மை ஆய்வாளர் சத்யன் சுப்பையா கூறும்போது, “எங்கள் நோக்கங்கள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களை உருவாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, அவற்றை ரத்தினங்களாகப் பயன்படுத்துவதோடு, நகைத் துறையைத் தாண்டிய பல்வேறு பயன்பாடுகளையும் வெளிப்படுத்துவது. இந்தியாவில் அடுத்த தலைமுறை தொழில் முனைவோர், வைரங்களை நகைகளிலிருந்து தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற தொழில்துறை உறுப்பினர்களுடன் இணைந்து, கூட்டு முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப திறன்களை உருவாக்கி, இந்தியாவின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத் துறையை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல எங்கள் மையம் செயல்படும்” என்றார்.
இந்த மையத்தை நிறுவுவதற்காக, இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் ஆதரவுடன், 2023–2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுக்கான ஆராய்ச்சி நிதியாக ரூ.242.96 கோடி அறிவிக்கப்பட்டது. இந்த மையத்தின் பலன்கள், மேலும் பல ஸ்டார்ட்-அப்புகளுக்கு தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்து, வேலைவாய்ப்புகளை அதிகரித்து, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களின் ஏற்றுமதியை உயர்த்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும்.
முக்கிய மாநாட்டு விளைவுகள்
இந்த மாநாட்டின் முக்கிய முடிவுகளில் பின்வருவன அடங்கும்:
வைரம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
ஆய்வக வைரங்களில் உள்நாட்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுயசார்பை மேம்படுத்துதல்.
தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்காக கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரித்தல்.
இந்த மாநாடு வைரம், கார்பன் சார்ந்த பொருட்களின் செயற்கை உருவாக்கம், வளர்ச்சி, டோப்பிங் மற்றும் அவற்றின் பண்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதுடன், அடுத்த தலைமுறை பயன்பாடுகளைச் சாத்தியப்படுத்துவதிலும் அதிக முக்கியத்துவம் அளித்தது. மேலும், அதிதிறன், அதிர்வெண், அதீத சூழல் மின்னணுவியலுக்கு மிக முக்கியமான அல்ட்ரா-வைட்-பேண்ட் கேப் பொருட்கள், அவற்றின் சாதன இயற்பியல் குறித்தும் இம்மாநாடு விரிவாக ஆராய்ந்தது.
இந்த மாநாடு வைரம் மற்றும் கார்பன் சார்ந்த பொருட்களின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தியது. அவற்றின் உருவாக்கம், வளர்ச்சி, கலப்பூட்டல், பண்பறிதல் ஆகியவை விரிவாகப் பேசப்பட்டன. அடுத்த தலைமுறை பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் இது வலியுறுத்தப்பட்டது.
மேலும், மிகப் பரந்த பட்டை இடைவெளி கொண்ட புதிய பொருட்கள் மற்றும் அவற்றின் கருவி இயற்பியல் குறித்தும் ஆராயப்பட்டது. இவை அதிக மின்சக்தி, அதிக அதிர்வெண் மற்றும் கடுமையான சூழ்நிலைகளில் செயல்படும் மின்னணு சாதனங்களுக்கு முக்கியமானவை.
மாநாட்டு விவரங்கள்
மூன்று நாட்களாக நடைபெற்ற இம்மாநாட்டில், கெமிக்கல் வேப்பர் டெபாசிஷன் முறையில் வைர வளர்ச்சி, வைரத்தைப் பதப்படுத்தும் பிந்தைய செயல்முறைகள், வைரத்தை அடிப்படையாகக் கொண்ட குவாண்டம் சென்சிங், போட்டோனிக்ஸ், மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்பங்கள் போன்ற தலைப்புகளில் முதன்மை உரைகள், சிறப்புரைகள் மற்றும் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன.
இம்மாநாட்டில் ஏறத்தாழ 60 சுவரொட்டி விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. இவை நானோடைமண்ட் தொழில்நுட்பங்கள் மற்றும் குவாண்டம் சென்சார்கள் முதல் மேம்பட்ட பூச்சுகள், மின்னணு பொருட்கள் வரையிலான பல்வேறு துறைகளில் பல்கலைக்கழகங்கள்- ஆய்வகங்களின் ஆராய்ச்சிகளை வெளிப்படுத்தின.
இந்த மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற தொழில்துறை கண்காட்சியில், லேசர் அமைப்புகள், கருவிகள், வைரச் செயலாக்கத் தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உட்பட, வைரம் மற்றும் மேம்பட்ட பொருட்கள் சார்ந்த சுமார் 25 நிறுவனங்கள் பங்கேற்றன. வைர அறிவியல் மற்றும் கார்பன் சார்ந்த மேம்பட்ட பொருட்கள் உள்ளிட்ட வேகமாக வளர்ந்து வரும் துறைகளில், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களுடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது. மேலும், சிறப்பான ஆராய்ச்சி பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.
***
TV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2247238)
வருகையாளர் எண்ணிக்கை : 43