சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு: புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAR 2026 7:39PM by PIB Chennai

ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் குறித்த பயிலரங்கு சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில்  புதுச்சேரியில் இன்று (மார்ச் 26, 2026) நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில்  பேசிய புதுச்சேரி  தலைமைத் தேர்தல் அதிகாரி திரு ஆர். ஜவகர், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்குப்  பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.  அனைத்துத்  தொகுதிகளிலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது நாட்டிலேயே இது முதல்முறை என்றும் அவர் கூறினார். புதுச்சேரி யூனியன் பிரதேசம்  புவியியல் ரீதியாக 3  மாநிலங்களில் பரவியிருப்பதாக அவர் தெரிவித்தார். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகே ஆகிய பகுதிகளில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், தேர்தல் செலவினப்  பார்வையாளர்கள் மற்றும் இதர அமலாக்க அலுவலர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வருவதாகவும்  தெரிவித்தார்.

 

புதுச்சேரியில் மெய்ப்பொருள் எனும் விழிப்புணர்வு இயக்கத்தை செயல்படுத்தி வருவதாகவும், வாக்குகளுக்காகப் பணம் கொடுப்பதும் பெறுவதும் குற்றம் எனவும் அதனைத் தடுக்க பல்வேறு தரப்பினருடன் இணைந்து பொதுமக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்தப் பணியில் ஊடக நண்பர்களும், இணைந்து தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும்  நடைபெற ஒத்துழைக்க  வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். வாக்காளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பினாலும் அதனை எளிதில் கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்க அனைத்து நிலைகளிலும் கண்காணிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

வன்முறை இல்லாத, மறு வாக்குப்பதிவு இல்லாத (2021-ல் ஒரே ஒரு வாக்குச்சாவடி தவிர) மாநிலம் என தேர்தல் நடைமுறையில் புதுச்சேரி முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும்  தெரிவித்த திரு ஜவகர், இந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் இருந்து தேர்தல் பார்வையாளர்கள் வரவிருப்பதாகவும் அவர்கள் 15 மாதிரி வாக்கு மையங்களில் தேர்தல் நடைமுறைகளை நேரில் பார்வையிடுவார்கள் என்றார்.

 

நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு ஆர் .கலைவாணன்,  19 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, மதுபானம், பரிசுப்பொருட்கள் கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். சிவிஜில் தளத்தில் புகார் அளித்தால் 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

 

45 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுச்சேரி தேர்தல் பணிக்கு வரவிருப்பதாக தெரிவித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர் குற்றப்  பதிவேடு குற்றவாளிகள், குற்றம் புரிவோர் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். 2026 மார்ச் 25 அன்று 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திரு .கலைவாணன் தெரிவித்தார்.

 

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் திரு. வை. பழனிச்சாமி பேசுகையில், தேர்தல் நடைபெறவுள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் முன் கூடுதல் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படும் உண்மைக்கு மாறான தகவல்கள் வாக்காளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள இன்றைய சூழலில், டீப்ஃபேக் போன்ற நவீன முறைகளைப் பயன்படுத்திப் போலிச் செய்திகள் அதிவேகமாக உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன என்றார். இத்தகைய சவால்கள் நிறைந்த டிஜிட்டல் யுகத்தில், ஊடகங்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை எவ்வித சரிபார்ப்புமின்றி அப்படியே வெளியிடக்கூடாது என்றும் செய்திகளின் உண்மைத்தன்மையை பல்வேறு கோணங்களில் முழுமையாக உறுதி செய்த பின்னரே அவற்றை வெளியிட  வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் பி அருண்குமார், ஊடக தொடர்பு அலுவலர் அ. அழகுதுரை, கள விளம்பர அலுவலர் கே. சக்திவேல் மற்றும் சுமார் 80 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

****

AD/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2245753) வருகையாளர் எண்ணிக்கை : 115