சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஆயிரக்கணக்கான கோடி கெய்ன் பிட்காயின் கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பான வழக்கில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAR 2026 3:28PM by PIB Chennai

கெய்ன் பிட்காயின் கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு தொடர்பாக டார்வின் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனரும்தலைமை நிர்வாக அதிகாரியான ஆயுஷ் வர்ஷ்னியை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்துள்ளது.

வேரியபிள்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் கெய்ன்பிட்காயின் போன்சி திட்டத்துடன் தொடர்புடைய இந்த வழக்கில், முதலீட்டாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து, மோசடியான கிரிப்டோகரன்சி திட்டத்தில் முதலீடு செய்யத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி பின்னர் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120பி, 406, 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66 - ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2023 - ம் ஆண்டு டிசம்பர் 13 - ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி, சிபிஐ இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது. இதன் மூலம் கெய்ன்பிட்காயின் மோசடியில், இதே போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் மீதான விசாரணையையும் சிபிஐ நடத்துவதற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது, எம்கேப் எனப்படும் கிரிப்டோ விலையின் வடிவமைப்பு, மேம்பாடு, பயன்பாடு மற்றும் தொடர்புடைய இஆர்சி-20 ஸ்மார்ட் ஒப்பந்தம் தொடர்பாக டார்வின் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இணை நிறுவனர்களான ஆயுஷ் வர்ஷ்னி, சாஹில் பாக்லா மற்றும் நிகுஞ்ச் ஜெயின் (வாமி ஏஐ நிறுவனத்தின் தலைமை மூலதன அதிகாரி / நிறுவனர்) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மோசடித் திட்டத்தின் முழு தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் டார்வின் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் முக்கிய பங்கு வகித்தது.

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக ஒரு லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. 09.03.2026 அன்று, நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது மும்பையில் உள்ள குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அந்த நபர் 10.03.2026 அன்று முறைப்படி சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

கெய்ன் பிட்காயின் மோசடி குறித்து விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு சிபிஐ உறுதிபூண்டுள்ளது.

வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

***

TV/SV/KR
 


(வெளியீட்டு அடையாள எண்: 2238162) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English