சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தரமான சுகாதார சேவைகளை ஊக்குவிக்க ஜிப்மர் சார்பில் மக்கள் மருந்தக விழிப்புணர்வு பேரணி
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2026 7:47PM by PIB Chennai

நாடுமுழுவதும் கொண்டாடப்படும் மக்கள் மருந்தக தின வாரத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) மருந்தியல் துறை, இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் நிறுவனம் (PMBI), சென்னை ஆகியவற்றுடன் இணைந்து 06 மார்ச் 2026 அன்று விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
இந்த நிகழ்வு, மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்தியல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமரின் மலிவு விலை மருந்தகங்கள் திட்டத்தின் நோக்கத்தினை முன்னெடுத்து நடத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், “ஜன் அவுஷதி கேந்திரா” எனப்படும் மக்கள் மருந்தகங்கள் வழியாக தரமான பொதுப்பயன் (ஜெனெரிக்) மருந்துகளை பொதுமக்களுக்கு மலிவான விலையில் வழங்குவது முக்கிய நோக்கமாகும்.
இந்த பேரணியை ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி தொடங்கி வைத்தார். அவருடன் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வினோத் குமார் சகா, துணை இயக்குநர் (நிர்வாகம்) திரு. எஸ். ரங்கபாஷியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியின் போது, டாக்டர் எல். என். பாபு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருந்துகளின் தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை எடுத்துரைத்தார். மேலும் திரு. முரளி முகுந்தன், ஜன் அவுஷதி மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் சேமிப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார்.
பேரணி நிறைவில், ஜிப்மர் மருந்தியல் துறையின் பொறுப்பு அதிகாரி டாக்டர் ஆர். கேசவன், திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்களை விளக்கினார். “அனைவருக்கும் தரமான மருந்துகள்” என்ற இந்திய அரசின் நோக்கத்தையும், தனியார் மருந்தகங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் விலை சலுகைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
மருந்தாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பேரணியின் போது விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி, பொதுமக்களிடம் ஜெனெரிக் மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பலகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
****
TV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2236128)
வருகையாளர் எண்ணிக்கை : 27