சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பழங்குடியினர், தங்களது கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - வனத்துறை அதிகாரி பேச்சு
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2026 4:03PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோயம்புத்தூர் கரும்பு இனப்பெருக்கு நிறுவனமானது , ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் இணைந்து “திருப்பூர் மாவட்டத்தில் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் (DAPSTC) துவக்க விழா” மற்றும் “பழங்குடியினருக்கான பயிற்சி முகாமினை” மார்ச் 4, 2024 அன்று திருப்பூர் மாவட்டத்தின் சின்னாரில் நடத்தியது.
இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய , கோவையின் ‘மாநில வனப்பணிக்கான உயர் பயிற்சியகத்தின்’ முதல்வர் திரு. வி. திருநாவுக்கரசு ஆரோக்கியமும், கல்வியும் தான் பழங்குடியினருக்கு அதிகாரமளிக்கும் வல்லமை பெற்றவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். பழங்குடியின ஆடவர்களின் வாழ்த்துப் பாடல் மற்றும் 'ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழி'யுடன் இந்த முகாமினை துவங்கிய கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தினை பாராட்டிய அவர் , கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தால் தத்தெடுக்கப்பட்டுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஏழு பழங்குடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கும், அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கும் இத்தகைய பயிற்சி முகாம்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் கோவிந்தராஜ் தனது உரையில், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் 2021 முதல் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளை எடுத்துரைத்தார். திட்ட குழுவுடன் தொலைதூர ஆட்டுமலை குடியிருப்புக்கு தான் ஒரு சவாலான பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த அவர், கடினமான சூழ்நிலைகளிலும் இப்பகுதியில் தொடர்ந்து விவசாயம் செய்து வரும் பழங்குடியின விவசாயிகளைப் பாராட்டினார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2023-ஆம் ஆண்டு , நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான தொழில்முனைவோர்-முயற்சிகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.
முன்னதாக, பழங்குடியின மேம்பாட்டு செயல் திட்டத்தின் திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரும், முதன்மை விஞ்ஞானியுமான புத்திர பிரதாப், இத்திட்டத்தின் மூலம் பழங்குடியினரின் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பயிற்சி முகாம்களும் இடுபொருட்கள் விநியோகமும் திட்டமிடப்படுவதாக தெரிவித்தார் . முதுவர் மற்றும் மலசர் பழங்குடியினர் வசிக்கும்– ஆட்டுமலை, பொறுப்பாறு, மஞ்சம்பட்டி, கருமுட்டி, கரட்டுபதி, திப்பிப்பாறை மற்றும் பூச்சக்கொட்டம்பாறை ஆகிய ஏழு குடியிருப்புகள் இந்த திட்டத்தின் மூலம் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . மிளகு போன்ற விளைபொருட்களை பதப்படுத்தி சந்தைப்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின ஸ்டார்ட்-அப்பை நிறுவிய 'காணி' பழங்குடியினரின் வெற்றிக்கதையினை குறிப்பிட்டு, அவர்களைப் போன்றே தொழில்முனைவோர் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தினை அவர் எடுத்துரைத்தார் .
முகாமின் துவக்கத்தில் எடுக்கப்பட்ட ‘ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு எதிரான உறுதிமொழியில்’ குறிப்பிடப் பட்டுள்ளபடி, குறைந்தபட்ச வயதுக்குள் நடத்தப்படும் திருமணங்களை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் திரு. ராஜேஷ் வலியுறுத்தினார். மேலும், இந்தத் திட்டத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தொடர் ஆதரவினையும் அவர் உறுதி செய்தார்.
பழங்குடித் தலைவர்களான (மூப்பர்கள்) திரு. கன்னியப்பன் மற்றும் திரு. சிலன் ஆகியோர் பேசுகையில் , தங்களது அறிவு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த திட்டம் மிகுந்த பலனளிக்கும் என்று தெரிவித்தனர் .
பின்னர் நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வின் போது, சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு குறித்து பேராசிரியர் சரஸ்வதி ஈஸ்வரன் அவர்கள் பயிற்சி அளித்தார் . தொடர்ந்து, மலைப்பகுதிகளில் ஊட்டச்சத்து தோட்டங்களை நிறுவுதல் மற்றும் இஞ்சி மற்றும் மிளகு பயிரிடுதல் குறித்து திரு. ராஜலிங்கம் பயிற்சி அளித்தார் . கரும்பு இனப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகள் பங்கேற்பாளர்களுடன் பழங்குடியினரின் மேம்பாட்டிற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர்.
இம்முகாமின் ஒரு பகுதியாக, பயனாளிகளுக்கு பவர் டில்லர்கள் (விசைக் கலப்பை), பாசனக் குழாய், பண்ணை கருவிகள், வீட்டுத் தோட்ட விதைகள், கேழ்வரகு மற்றும் பசுந்தாள் உர விதைகள் மற்றும் பாக்கு நாற்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
***
TV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235958)
வருகையாளர் எண்ணிக்கை : 18