சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், தொழில்துறை வல்லுநர்களுக்காக ‘உற்பத்திப் பகுப்பாய்வு’ (Manufacturing Analytics) முதுகலை பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 3:10PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) ‘உற்பத்திப் பகுப்பாய்வு’ முதுகலை பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. உற்பத்தித் துறை வல்லுநர்களுக்குத் தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் மேம்பட்ட திறன்களை வழங்கும் வகையில் இந்த ஓராண்டு கால இணையவழிப் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடங்கியிருப்பதன் மூலம் தொழில்துறைக்குத் தேவையான முதுகலைப் பாடத்திட்டங்களை ஐஐடி மெட்ராஸ் மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவின் வளர்ந்துவரும் உற்பத்திச் சூழலுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பம், தலைமைத்துவப் பண்புகளை உருவாக்குவதில் தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை தயாரித்துள்ள இப் பாடத்திட்டத்தில், உற்பத்திச் செயல்பாடுகள், உற்பத்தித் திறன் மேம்பாடு, உத்திசார் முடிவெடுத்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவை நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய வல்லுநர்களுக்கான வளர்ந்துவரும் தொழில்துறைத் தேவை ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த டிப்ளமோ படிப்பின் வகுப்புகள் 7 செப்டம்பர் 2026 அன்று தொடங்கும். இந்த பாட பிரிவிற்கு விண்ணப்பிக்க 31 மே 2026 கடைசி நாள். https://code.iitm.ac.in/pgdma என்ற இனப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வலுவான கணித அடித்தளங்களை இயந்திரக் கற்றல், ஆழ்ந்த கற்றல், ஜெனரேட்டிவ் ஏஐ போன்ற சமகாலத்துக்கு ஏற்றவாறு இணைப்பதுடன் உற்பத்தித் துறை சார்ந்த அன்றாடப் பயன்பாடுகளுக்கு இப்பாடத்திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆண்டொன்றுக்கு (செப்டம்பர்-ஆகஸ்ட்) மூன்று பருவங்களாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பட்டயப் படிப்பு, மொத்தம் 90 கிரெடிட்களைக் கொண்டுள்ளது. இதுவே இப்படிப்பின் கல்வித் தரம், செயல்முறை விளக்கத் தன்மை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
இதுபோன்ற பாடத்திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தி, ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில் "இந்தியாவின் உற்பத்தித் துறை தனது டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தி வரும் நிலையில், கல்வியின் ஆழத்தையும் தொழில்துறைக்கான பொருத்தத்தையும் இணைக்கும் பாடத்திட்டங்களின் தேவை தெளிவாக உள்ளது. உற்பத்தியில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் எதிர்கால வல்லுநர்களை உருவாக்குவதில் ஐஐடி மெட்ராஸ்-ன் அர்ப்பணிப்பை இந்த முதுகலை பட்டயப் படிப்பு பிரதிபலிக்கிறது." என்றார்.
பி.எஸ்சி. கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் உட்பட தொடர்புடைய துறைகளில் மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் இளங்கலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இந்த டிப்ளமோ படிப்பு, பெரிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுநர்களையும், உற்பத்திப் பகுப்பாய்வில் மேம்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்பும் தகுதியுள்ள பட்டதாரிகளையும் இலக்காகக் கொண்டது. பல்வேறு வகைகளில் கற்போரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இணையவழி முறையில் இந்தப் பாடத்திட்டம் நடத்தப்படும்.
உற்பத்திப் பகுப்பாய்விற்கான கணித அடிப்படைகள், டிஜிட்டல் மாற்றம், உற்பத்திப் பகுப்பாய்விற்கான இயந்திரக் கற்றல், ஆழ்ந்த கற்றல், உற்பத்திப் பகுப்பாய்விற்கான ஜெனரேட்டிவ் ஏஐ ஆகியவை இதில் அடங்கும். மேலும், 'உற்பத்திப் பகுப்பாய்வு அமலாக்கம் I மற்றும் II' ஆகிய இரண்டு நேரடிப் பயிற்சிப் பாடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
'உற்பத்திப் பகுப்பாய்வில் ஏஐ-ன் ஒட்டுமொத்த மதிப்பீடு' என்ற பாடத்துடன் இப்பாடத்திட்டம் நிறைவடைகிறது. கற்பவர்கள் தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் நிறுவன ரீதியான பார்வைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை மதிப்பீடு செய்ய வழிவகுக்கிறது.
***
TV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235535)
வருகையாளர் எண்ணிக்கை : 20