சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய தமிழறிவியல் மாநாடு 2026 நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2026 4:37PM by PIB Chennai

சென்னை சிஎஸ்ஐஆர் –கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையமும், விஞ்ஞான பாரதி (VIBHA)யின் அங்கமான தமிழ்நாடு  அறிவியல் சங்கமும் இணைந்து ஒருங்கிணைத்த முதல் தேசிய தமிழ் அறிவியல் மாநாடு சென்னை தரமணி சிஎஸ்ஐஆர் வளாகத்தில் உள்ள விக்யான் அரங்கில் இன்று நிறைவு பெற்றது. “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நிலையான வளர்ச்சி” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை

 

2026 பிப்ரவரி 20 ஆம் தேதி சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், உஷா நடேசன் துவக்கி வைத்தார். துவக்க விழாவிற்கு சென்னை கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் நா. ஆனந்தவல்லி தலைமை தாங்கினார். சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி -ன் முதன்மை விஞ்ஞானி மற்றும் மேலாண்மை ஆலோசகர், பாரிவள்ளல், வரவேற்புரை வழங்கினார். இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முன்னாள் தலைமை இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் (DSIR) முன்னாள் செயலாளருமான ஷேகர் சி. மண்டே, விஞ்ஞான் பாரதியின் தேசிய இணை அமைப்புச் செயலாளர், திரு. பிரவீன் ராம்தாஸ் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். அறிவியல் சங்க செயலாளர் மணி பிரகாஸ்பதி நன்றியுரை வழங்கினார்.

 

மாநாட்டில் முழுக்கூட்ட உரைகள், அழைப்புரைகள், அறிவியல் ஆய்வுக் கட்டுரை வழங்கல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. தமிழ் மொழி அறிவியல் தொடர்புக்கான வலுவான ஊடகமாக இந்நிகழ்வு அமைந்தது. முழு அவையின்  உரையை  சென்னை, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் தணிகைவேலன் வழங்கினார். இயற்பியல் மற்றும் வேதியியல், உயிரியல் மற்றும் மருத்துவ அறிவியல், கணித மற்றும் வேளாண் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியல், பூமி–வளிமண்டலம்–சுற்றுச்சூழல் அறிவியல், மற்றும் இந்திய அறிவு முறைமைகள் ஆகிய ஆறு முக்கிய கருப்பொருள் புலங்களில் அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது.  ஒவ்வொரு அமர்விலும் நிபுணர் உரைகளும் பங்கேற்பாளர் ஆய்வுக் கட்டுரை வழங்கல்களும் இடம்பெற்றன.

 

முக்கிய அமர்வுகளில், திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழக  இயக்குநர் முனைவர் ஜி. அகிலா உட்பட பலர் உரையாற்றினர். இதில் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

***

TV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231489) வருகையாளர் எண்ணிக்கை : 158
இந்த வெளியீட்டை படிக்க: English