சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ், மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் படிப்பில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 4:01PM by PIB Chennai

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மேலாண்மைக் கல்வித் துறை (Department of Management Studies – DoMS) மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் பல்துறை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படிப்பில் சேருவோரை வணிகரீதியாக முடிவெடுத்தல், சிந்தித்து திட்டமிடல், தரவு சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறச் செய்யும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறுவோருக்கு ஐஐடி மெட்ராஸ்-ன் இளங்கலை அறிவியல் பட்டம் வழங்கப்படும். இக்கல்வி நிறுவனம் வழங்கும் இதர இளங்கலைப் பட்டங்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும்.

இப்படிப்பின் வகுப்புக்கள் ஜூன் 2026ல் தொடங்கும். இதற்கு விண்ணப்பிக்க மே 31, 2026 கடைசி நாளாகும். பாடத்திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கை விவரங்களை பின்வரும் இணையதளத்தில் காணலாம்- https://study.iitm.ac.in/mg

இந்த பாடத்திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இன்று (பிப்ரவரி 21, 2026) இக்கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.  தலைமை விருந்தினர் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் இந்தியா பிரிவுத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திருமதி கங்கப்ரியா சக்ரவர்த்தி, கவுரவ விருந்தினர் சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. ராஜீவ் சி.லோச்சன், ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் சஜி மேத்யூ, ஐஐடி மெட்ராஸ் CODE தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், ஐஐடி மெட்ராஸ் கல்விக்கான பாடநெறிப் பிரிவின் டீன் பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், ஐஐடி மெட்ராஸ் மேலாண்மை கல்வித்துறை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஜி.அருண் குமார், பேராசிரியர் பி.விபின் மற்றும் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விழாவில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “தரவு சார்ந்த உலகில் தலைமைத்துவத்திற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஐஐடி மெட்ராஸ்-ன் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக மேலாண்மை மற்றும் தரவு அறிவியலில் பி.எஸ். பட்டப்படிப்பு அமைந்துள்ளது. வலுவான பகுப்பாய்வு அடித்தளங்களுடன் மேலாண்மைக் கல்வியை ஒருங்கிணைப்பதன் மூலம், மாணவர்கள் அனைத்துத் தொழில்களிலும் தகவலறிந்த, பொறுப்பான, தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க இந்த படிப்பு உதவுகிறது, அதே நேரத்தில் நெகிழ்வுத்தன்மை மற்றும் எளிதில் அணுகுதல் ஆகியவற்றையும் உறுதி செய்கிறது" என்றார்.

ஐஐடி மெட்ராஸ்-ன் மேலாண்மைக் கல்வித் துறைத் தலைவர் பேராசிரியர் சஜி மேத்யூ கூறுகையில், "மேலாண்மை மற்றும் தரவு அறிவியலில் இந்த தனித்துவமான பிஎஸ் பாடத்திட்டம், வலுவான பகுப்பாய்வு திறன்களைக் கொண்ட மேலாண்மை நிபுணர்களின் வளர்ந்து வரும் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள தொழில்நுட்பம், மேலாண்மை, தொழில்முனைவு சுற்றுச்சூழல் அமைப்பு இப்படிப்பில் பயன்படுத்தப்படுகிறது. வயது மற்றும் இருப்பிடப் பிரச்சனைகள் இன்றி அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பாடத்திட்டம் உயர்தர தரவு சார்ந்த மேலாண்மைக் கல்விக்கான சிறந்த முன்முயற்சி" எனக் குறிப்பிட்டார்.

பணிபுரியும் நிபுணர்கள் மற்றும் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வுகள் நடத்தப்படும். பாடத்திட்டத்தைப் பொறுத்து, இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தப்படலாம் அல்லது தொலைதூர மேற்பார்வையாளர் மூலம் ஆன்லைனில் நடத்தப்படலாம்.

தகுதி

12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுள்ள டிப்ளமோ முடித்தவர்கள் உட்பட எவரும் இப்படிப்பில் சேரலாம். வயது வரம்பு, மாணவர் சேர்க்கை வரம்புகள் எதுவும் இல்லை. கற்பவர்கள் இப்படிப்பை தனிப் பட்டப்படிப்பாகவோ அல்லது வேறு கல்வித் திட்டத்துடன் இணைந்தோ அல்லது பணியில் இருந்துகொண்டே தொடரலாம்.

விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வு மூலமாகவோ அல்லது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெறுவதன் மூலமாகவோ இந்தப் படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.

***

TV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231200) வருகையாளர் எண்ணிக்கை : 86
இந்த வெளியீட்டை படிக்க: English