சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னையை வந்தடைந்தது ‘வந்தே மாதரம்’ கடலோர மிதிவண்டிப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2026 4:04PM by PIB Chennai

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) சார்பில் “பாதுகாப்பான கடற்கரை, வளமான இந்தியா” என்ற கருப்பொருளில் நடத்தப்படும் 6,553 கி.மீ தேசிய கடலோர மிதிவண்டிப் பயணம்  இன்று சென்னையை வந்தடைந்தது. மெரினா கடற்கரையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

 

மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. நித்யானந்த் ராய் கடந்த ஜனவரி 28 அன்று டெல்லியில் தொடங்கி வைத்த இந்தப் பயணம், வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அமைகிறது. இதில் 65 பெண் காவலர்கள் உட்பட 130 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் தொடங்கி ஒடிசா, ஆந்திரா வழியாகத் தற்போது தமிழகத்தை இப்பயணம் வந்தடைந்துள்ளது.

 

வழியில் மீனவ கிராமங்களில் தங்கிய வீரர்கள், கடற்கரைப் பாதுகாப்பில் மீனவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, கடற்கரைத் தூய்மைப் பணிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினர். இந்தியாவின் 12 முக்கியத் துறைமுகங்களைப் பாதுகாக்கும் சி.ஐ.எஸ்.எஃப், கடலோரப் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், நீலப் பொருளாதாரத்தின்  முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

’கடலோர மிதிவண்டிப் பயணத்தின் ஒரு பகுதியாக, கடலோர மக்களுடன் நீண்டகாலத் தொடர்பைப் பேண சி.ஐ.எஸ்.எஃப்  ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இப்பயணப் பாதையில் உள்ள 52 கடலோரக் கிராமங்களைச் சி.ஐ.எஸ்.எஃப் அடையாளம் கண்டுள்ளது.

 

தனது 47 கடலோரப் பாதுகாப்புப் பிரிவுகள் மூலம் இந்தக் கிராமங்களில் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள சி.ஐ.எஸ்.எஃப் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, துறைமுக ஆணையம், ஓ.என்.ஜி.சி (ONGC) போன்ற பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து, சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் இக்கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

***

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2227873) வருகையாளர் எண்ணிக்கை : 101
இந்த வெளியீட்டை படிக்க: English