சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னையில் சிஎஸ்ஐஆர் சார்பில் நடத்தப்படும் ஆராய்ச்சி, தொழில்முனைவு தொடர்பான இரண்டு நாள் மாநாட்டை 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 12 FEB 2026 6:00PM by PIB Chennai

 

இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலான சிஎஸ்ஐஆர் (CSIR), அதன் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் வகையில், ஆராய்ச்சி-தொழில்-புத்தொழில் மற்றும் தொழில்முனைவு (Research-Industry- Start up and Entrepreneurship - RISE- 2026) என்ற மாநாட்டை 14.02.2026 அன்று சென்னையில்  நடத்துகிறது. தொடக்க அமர்வில் கல்வி நிறுவனங்களுடன், சிஎஸ்ஐஆர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளும்.

புத்தொழில் நிறுவனங்களுக்கான தொழில் பாதுகாப்பகங்களை எளிதாக்குவதில் முன்னணியில் இருக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒரு கட்டமைக்கப்பட்ட தொடர்பை ஏற்படுத்தும் வகையில், சிஎஸ்ஐஆர் பிப்ரவரி 14, 15 தேதிகளில் சென்னையில் இந்த இரண்டு நாள் மாநாட்டை நடத்துகிறது.

 

சென்னை வர்த்தக மையத்தில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார். இது கொள்கை வகுப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் துறையினர், புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பை எளிதாக்கும்.

இந்த மாநாடு தொடர்பான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சிஎஸ்ஐஆர் - எஸ்இஆர்சி (CSIR-SERC) இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி, சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ (CSIR-CLRI) இயக்குநர் டாக்டர் என்.தணிகைவேலன், சிஎஸ்ஐஆர்-சிஇசிஆர்ஐ (CSIR-CECRI) இயக்குநர் டாக்டர் கே.ரமேஷ் ஆகியோர், இந்த மாநாட்டின் கருப்பொருள் குறித்து எடுத்துரைத்தனர். பசுமை எரிசக்தி, சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, நகர்ப்புற திட்டமிடல், மேம்பட்ட பொருட்கள் வடிவமைப்பு, அடுத்த தலைமுறை தோல் பொருட்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். மாநாட்டின் பிற கருப்பொருள்கள், பண்ணையிலிருந்து எதிர்காலம் வரை, சிறந்த எதிர்காலத்திற்கான வளங்கள், வாழ்க்கை அறிவியல், மருத்துவ கண்டுபிடிப்பு ஆகியவை என்று அவர்கள் கூறினர்.

ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர், கல்வித்துறையினர், இளம் தொழில்முனைவோர் ஆகியோரிடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை வளர்ப்பது என்ற அணுகுமுறையின் மூலம், புத்தொழில் நிறுவனங்களின்  மேம்பாட்டுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மாநாடு நடத்தப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஒத்துழைப்பை வலுப்படுத்த, மாநாட்டின் போது சிஎஸ்ஐஆர்-ருக்கும் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் பாதுகாப்பு மையங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் என்று டாக்டர் ஆனந்தவல்லி கூறினார்.

100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், முக்கியமாக புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஆகியவை தங்கள் தயாரிப்புகளை மாநாட்டில் காட்சிப்படுத்துவார்கள் என்று டாக்டர் பி.தணிகைவேலன் கூறினார்.

மாநாட்டின் நோக்கங்களை எடுத்துக் கூறிய டாக்டர் கே. ரமேஷ், சிஎஸ்ஐஆர் தொழில்நுட்ப வழிகாட்டியாக செயல்படும் என்றும், இதன் மூலம் சந்தையில் புதுமைகள் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று சிஎஸ்ஐஆர்-ன் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் கே.ஜே.ஸ்ரீராம் கூறினார்.

மாநாட்டின் இறுதி நாளில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார்.

புத்தொழில் நிறுவனத்தினர், தொழில்துறை பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மாணவர் சமூகத்தினர் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட முதன்மை முயற்சிகளுக்கு பங்களிக்குமாறு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

***

SG/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2227185) வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க: English