திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மாநில பல்கலைக்கழகம்: கல்வித்துறையில் புதிய புரட்சிக்கு வித்திட்ட மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி
प्रविष्टि तिथि:
28 JAN 2026 7:06PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு. ஜெயந்த் சௌத்ரி, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதற்கான அரசின் தொலைநோக்குப் பார்வையை இன்று வெளியிட்டார். கூகுள் நிறுவனத்தின் 'கல்விக்கான செயற்கை நுண்ணறிவு' மாநாட்டில் பங்கேற்ற அவர், மீரட்டில் உள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தை (சிசிஎஸ்யூ) இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மாநிலப் பல்கலைக்கழக முன்னோடித் திட்டமாக அறிவித்தார்.
மத்திய அமைச்சகம், கூகுள் கிளவுட் மற்றும் பல்கலைக்கழகம் இடையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டு ஒப்பந்தம், பிரதமர் மோடியின் 'தொழில்நுட்பம் சார்ந்த வளர்ந்த இந்தியா 2047' இலக்கை நோக்கிய முக்கிய நகர்வாகும். இத்திட்டத்தின் கீழ், சிசிஎஸ்யூ பல்கலைக்கழகம் ஏஐ-வழி நிறுவனச் சீர்திருத்தங்களுக்கான ஒரு நேரடி சோதனை மையமாக செயல்படும். இங்கு மாணவர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட ஏஐ ஆசிரியர்கள், வேலைவாய்ப்புத் திறன் இடைவெளி பகுப்பாய்வு மற்றும் நிர்வாகப் பணிகளை எளிதாக்க ஏஐ கருவிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
"பட்டம் மற்றும் திறன் ஆகியவற்றைத் தனித்தனிப் பாதைகளாகப் பார்த்த காலம் மறைந்துவிட்டது. ஏஐ தொழில்நுட்பம் இவ்விரண்டையும் இணைக்கும் பாலமாக அமையும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்யும்" என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு, நாட்டின் 45,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை நவீனப்படுத்த ஒரு தேசிய வரைபடத்தை அரசு உருவாக்கும் என்றார்.
இந்தியாவுக்காக உருவாக்கப்படும் குறைந்த விலை ஏஐ கருவிகள், வளர்ந்துவரும் நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்று அவர் தெரிவித்தார். மேலும், கூகுள் நிறுவனம் தனது ஏஐ ஆதரவைக் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, ஆசிரியர்களை வலிமைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, ஸ்வயம் போன்ற தேசிய கல்வித் தளங்களில் ஏஐ கருவிகளை ஒருங்கிணைக்க கூகுள் 85 கோடி ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219744®=3&lang=2
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2219847)
आगंतुक पटल : 10