சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் துறைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிஐஎஸ் சென்னை கிளை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 27 JAN 2026 7:50PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியாவின் தேசிய தர நிர்ணய அமைப்பாகும். பிஐஎஸ் தனது நிறுவன தினக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக, இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னை கிளை, பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் (Furniture) உற்பத்தித் துறைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை 27 ஜனவரி 2026 அன்று தனது சென்னை கிளை அலுவலகத்தில் நடத்தியது.

  

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் துறைகளில் செயல்படும் உற்பத்தியாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடையே, தரக் கட்டுப்பாட்டு ஆணைகள், அரசு வழிகாட்டுதல்கள், தொடர்புடைய இந்திய தரநிலைகள் மற்றும் பிஐஎஸ் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

 

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குனர் மற்றும் தலைவர் திரு. S. D. தயானந்த் தனது உரையில், இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (QCOs), அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறை அறிவுறுத்தல்கள் குறித்து தொழில் துறையினருக்கு தெளிவான புரிதலை வழங்குவதே நோக்கம் எனக் குறிப்பிட்டார். மேலும், BIS சார்பில் வழங்கப்பட்டுவரும் கட்டண சலுகைத் திட்டம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாகவும், அதன் கீழ் குறு நிறுவனங்களுக்கு 80% கட்டணத் தள்ளுபடி, சிறு நிறுவனங்களுக்கு 50% மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தத் திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் ஆதரவாக அமையும் என அவர் தெரிவித்தார்.

மேலும், பிரதமரின் தெரிவித்த “Zero Defect – Zero Effect” என்ற தேசிய இலக்கை வலியுறுத்தி, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளாவிய தரத்திற்கான அளவுகோலாக விளங்க வேண்டும் எனக் கூறினார். ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட, தரமே உற்பத்தியின் அடிப்படை அம்சமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப அமர்வில் பேசிய பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குனர் திரு. முனிநாராயணா, பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் தயாரிப்புகளுக்குப் பொருந்தும் இந்திய தரநிலைகள், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள், இது தொடர்பான சட்டங்கள்,  பிஐஎஸ் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தயாரிப்பு சோதனை தேவைகள், தொழிற்சாலை ஆய்வு நடைமுறைகள், சந்தை கண்காணிப்பு செயல்முறைகள் மற்றும் இணக்கம் தொடர்பான பொறுப்புகள் குறித்து விளக்கினார். மேலும், தரநிலைகள் உருவாக்கம், திருத்தம் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள, தொழில் துறையினர் Standards Watch-ஐ உபயோகிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், BIS Care App-ன் அம்சங்கள் மற்றும் பயன்கள் குறித்தும் விளக்கி, தரநிலைகள், சான்றிதழ் விவரங்கள் மற்றும் நுகர்வோர் சேவைகள் தொடர்பான தகவல்களை எளிதில் பெற இந்த செயலியை பயன்படுத்துமாறு பங்கேற்பாளர்களை கேட்டுக் கொண்டார்.

தொழில்நுட்ப அமர்வுகளுக்குப் பின்னர்  கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.

உற்பத்தியாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

TV/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2219330) வருகையாளர் எண்ணிக்கை : 78
இந்த வெளியீட்டை படிக்க: English