ஜவுளித்துறை அமைச்சகம்
சணல் தட்டுப்பாட்டைப் போக்க அதிரடி நடவடிக்கை: மத்திய அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
20 JAN 2026 7:09PM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், கச்சா சணல் விலையேற்றம் மற்றும் அதன் இருப்பு குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். சணல் ஆலைகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்குத் தடையின்றி கச்சா சணல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இதற்காக, சணல் ஆலைகள் வைத்துக்கொள்ளக்கூடிய கச்சா சணல் இருப்பு வரம்பை உயர்த்தவும், அதே வேளையில் வியாபாரிகள் மற்றும் சணல் மொத்த வியாபாரிகள் வைத்துக்கொள்ளும் இருப்பு வரம்பைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சணல் பதுக்கலைத் தடுத்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சணல் ஆணையர் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பதுக்கல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அமைச்சர் உத்தரவிட்டார். ஏற்கனவே சில வியாபாரிகள் விதிகளை மீறி சணலைப் பதுக்கியது கண்டறியப்பட்டுள்ளது. சணல் விலையேற்றத்தைச் சமாளிக்க, சணல் பைகளின் கொள்முதல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 2024 செப்டம்பரில் ஒரு பையின் விலை 60 ரூபாயாக இருந்த நிலையில், அது 2025 செப்டம்பரில் 74 ரூபாயாகவும், தற்போது 2026 ஜனவரியில் 87.20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமார் 80 சதவீத தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பயனடைவார்கள்.
தேசிய சணல் வாரியத்தின் திட்டத்தின் கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகளின் அளவை அதிகரிக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். சந்தை விலை ஆதரவு விலையை விடக் குறையும் போது, விவசாயிகளிடமிருந்து நேரடியாகச் சணல் கொள்முதல் செய்வதை இந்திய சணல் கழகம் உறுதி செய்து வருகிறது. சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்திய சணல் கழகம், 2024-25 நிதியாண்டில் 56.82 கோடி ரூபாய் லாபம் ஈட்டி, இதுவரை இல்லாத அளவாக 17.04 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216547®=3&lang=1
வெளியீட்டு எண்: 2216547
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2216641)
வருகையாளர் எண்ணிக்கை : 74
இந்த வெளியீட்டை படிக்க:
Urdu