பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜ்கோட்டில் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியங்களுக்கான துடிப்பான குஜராத் பிராந்திய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

உலக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும்போதும், இந்தியா உறுதியுடன் முன்னேறி வருகிறது: பிரதமர்

வளர்ச்சியில், சீர்திருத்தங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன: பிரதமர்

प्रविष्टि तिथि: 11 JAN 2026 5:45PM by PIB Chennai

குஜராத்தின் ராஜ்கோட்டில் இன்று (11.01.2026) நடைபெற்ற கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பான குஜராத் பிராந்திய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, 2026-ம் ஆண்டின் தொடக்கத்திற்குப் பிறகு, குஜராத்துக்கு தமது முதல் பயணம் என்று குறிப்பிட்டார். காலையில் சோம்நாத்தின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றதாகவும், இப்போது ராஜ்கோட்டில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இருபது ஆண்டுகளில் குஜராத்தின் பயணம் உலகளாவிய அளவுகோலாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.  இந்த உச்சிமாநாடு இப்போது முதலீட்டைத் தாண்டி உலகளாவிய வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் தளமாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  பெருநிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் என அனைத்தும் இங்கு ஒன்றிணைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த இருபது ஆண்டுகளாக, துடிப்பான குஜராத் உச்சி மாநாடு தொடர்ந்து புதியவற்றை அறிமுகப்படுத்தி வருவதாகவும், இந்த பாரம்பரியத்தின் மற்றொரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். குஜராத்தின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பலம் உள்ளது என்றும், பிராந்திய உச்சி மாநாடு அந்த பிராந்திய வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இதில் குஜராத்  முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருவதாகவும், இந்தியா மீதான உலகளாவிய எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்றும் அவர் கூறினார். இப்போது உலகளாவிய பொருளாதார நிபுணர்களும் நிறுவனங்களும் இந்தியா மீது நம்பிக்கையுடன் இருப்பதை எடுத்துரைத்த பிரதமர், சர்வதேச செலாவணி நிதியம் இந்தியாவை உலக வளர்ச்சியின் இயந்திரம் என்று அழைப்பதாகக் குறிப்பிட்டார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு இடையிலும், இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அவர் கூறினார். துடிப்பான குஜராத் பிராந்திய உச்சி மாநாடு அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பு என அவர் தெரிவித்தார்.

எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும், நேர்மையுடனும் கடின உழைப்புடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் என்பதை குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள் நமக்குக் கற்பிக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரழிவு தரும் பூகம்பத்தை சந்தித்த அதே கட்ச் பகுதியும், பல ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட அதே சௌராஷ்டிராவும் வளர்ச்சிக்கு சிறந்த உதாரணங்கள் என்று அவர் கூறினார்.  காலம் மாறுகிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது எனவும் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் மக்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் தங்கள் விதியை மாற்றியுள்ளனர் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

சௌராஷ்டிராவும் கட்ச்சும் வெறும் வாய்ப்புகளுக்கான பகுதிகள் மட்டுமல்லாமல், இந்தியாவின் வளர்ச்சியின் முக்கியப் பகுதிகளாகவும் மாறிவிட்டன என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்த பகுதிகள் தற்சார்பு இந்தியா இயக்கத்தை இயக்கும் முக்கிய மையங்களாக மாறி வருவதாகவும் கூறினார்.

தொழில் வளர்ச்சிக்கு, உள்கட்டமைப்புடன், நவீன தொழில்துறைக்குத் ஏற்ற பணியாளர்கள் இன்றைய மிகப்பெரிய தேவை என்று பிரதமர் குறிப்பிட்டார். குஜராத் இந்த விஷயத்தில் முதலீட்டாளர்களுக்கு முழுமையான உறுதிப்பாட்டை வழங்குகிறது என அவர் தெரிவித்தார். பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வாய்ப்புகளைப் பார்க்கின்றன என்றும், குஜராத் அவர்களின் விருப்பமான இடமாக மாறியுள்ளது என்றும், இரண்டு பெரிய ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே மாநிலத்தில் வளாகங்களைத் தொடங்கியுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

இப்போதைய இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி வேகமாகச் செயல்பட்டு வருவதாகவும், இந்தப் பயணத்தில் சீர்திருத்தங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு துறையிலும் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.  இந்தியாவின் சீர்திருத்தப் பயணம் தொடரும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் திரு முகேஷ் அம்பானி, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. கரண் அதானி, ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பராக்ராம்சிங் ஜி ஜடேஜா, வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் ஸ்ரீ பி.கே. கோயங்கா உள்ளிட்டோரும் பல்வேறு வெளிநாடுகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213431&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2213478) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Odia , Kannada , Malayalam