சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியாவின் தரநிலைகளை மேம்படுத்துவதில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் அளப்பரிய பங்கு
प्रविष्टि तिथि:
05 JAN 2026 5:48PM by PIB Chennai
இந்திய தரநிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) 79-ம் ஆண்டு நிறுவன தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6 அன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் தேசிய தரநிலைகள் அமைப்பான இது 1947ம் ஆண்டு இந்திய தர நிலைகள் நிறுவனம் (ஐஎஸ்ஐ) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனத்திற்கு 1986-ம் ஆண்டில் இந்திய தர நிர்ணய அமைவனம் என்று பெயரிடப்பட்டது.
மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அவர்களுக்கான சேவைகள் பாதுகாப்பாகவும் நம்பகமானதாகவும், தரமாகவும் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஐஎஸ்ஐ முத்திரை என்பதை நம் நாட்டு மக்கள் அறிந்திருப்பார்கள். அது பொருட்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக விளங்குகிறது.
ஆனால் பிஐஎஸ், நிறுவன மேலாண்மை முறைகளுக்கான சான்றிதழ்கள், தங்கம், வெள்ளி ஆபரணங்களுக்கு ஹால்மார்க் சான்றிதழ், மின்னணு பொருட்களுக்கு கட்டாய பதிவுத் திட்டங்கள் ஆகியவற்றையும் அளிக்கிறது. இந்நடவடிக்கைகள் பொதுமக்களின் நலனை பாதுகாப்பதோடு, தொழில்துறைகள் பொறுப்புடன் வளர்ச்சியடையவும் உதவுகிறது.
நாட்டின் முக்கிய தொழில்துறைகளை வலுப்படுத்தியதில் பிஐஎஸ் முக்கிய பங்காற்றியுள்ளது. நாட்டின் பழமையான தொழில்துறைகளில் ஒன்றான கோயம்புத்தூரின் பம்ப் உற்பத்தி தொழில் பிஐஎஸ் வழிகாட்டுதலால் பெரிதும் பயனடைந்துள்ளது.
1970-ம் ஆண்டுகளில் வேளாண்மை தொழில் விரைவாக வளர்ச்சியடைந்தபோது, பாசனத்திற்காக பம்ப்புகளின் பயன்பாடு அதிகரித்து, மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றின் செலவினம் கூடியது. இதை கருத்தில்கொண்டு, 1979-ம் ஆண்டு பிஐஎஸ் விவசாய பம்ப்புகளுக்கு திறன் தொடர்பான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. இதனால் மின்சார சேமிப்பு ஏற்பட்டதுடன், உயர்தர மற்றும் திறன்மிக்க பம்ப் உற்பத்திக்கு வழிவகுத்தது.
பிஐஎஸ் வழிநடத்துதலால் சிமெண்ட் தொழிலும் முன்னேற்றமடைந்தது. சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகள் சிமெண்ட் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாகவும் இருந்தது. பின்னர் அது 1989-ம் ஆண்டு நீக்கப்பட்டபோது, அதன் தரம் குறையாமல் இருக்க பிஐஎஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பிற தொழில்துறைகளில் உருவாகும் ஃப்ளை ஆஷ், ஸ்லாக் போன்ற துணை உற்பத்திகளை சிமெண்டில் பயன்படுத்த அனுமதித்து பசுமையான கட்டுமானத்தை பிஐஎஸ் ஊக்குவித்தது. இதன் மூலம், கழிவு குறைக்கப்பட்டதுடன் நாட்டின் கட்டுமானத்துறை விரைவாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் வளர்ச்சியடைந்தது.
வேளாண் நிலங்கள் முதல் தொழிற்சாலைகள் வரையிலும், வீடுகள் முதல் நெடுஞ்சாலைகள் வரையிலும் நாட்டின் வளர்ச்சிக்கு பிஐஎஸ் துணை நிற்கிறது. தெளிவான தரநிலைகளை அமைத்து தரமான நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம், தொழில்துறைகள் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வளங்களை சேமிக்கவும், மக்களின் நம்பிக்கையை பெறவும் பிஐஎஸ் உதவியுள்ளது. இதன் பணிகள் பெரும்பாலும் வெளிப்படையாக தெரியாத போதிலும் அதன் தாக்கம் எங்கும் உணரப்படுகிறது.
தரம், பாதுகாப்பு, நீடித்த தன்மை ஆகியவற்றுடன் இணைந்த வளர்ச்சியை உறுதிசெய்து இந்திய பொருளாதாரத்தின் வலுவான தூணாக பிஐஎஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பிஐஎஸ் தமது 79-வது நிறுவன தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
எழுதியவர்
எஸ் ரினோ ஜான்
விஞ்ஞானி / இயக்குநர்
பிஐஎஸ், கோயம்புத்தூர் கிளை அலுவலகம்
***
AD/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2211742)
आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English