சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ்-ஐ உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஐஐடிஎம் குளோபலை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
02 JAN 2026 6:27PM by PIB Chennai
NFRW.jpg)
வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கர், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச முயற்சியான ‘ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (IITM Global Research Foundation) இன்று (ஜனவரி 2, 2026) இக்கல்வி நிறுவன வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாறுவதற்கான ஐஐடி மெட்ராஸின் பயணத்தில் இந்த தொடக்கம் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவுக்கான உலகளாவிய வலையமைப்பு மையமாக இக்கல்வி நிறுவனத்தை நிலைநிறுத்தியுள்ளது.
'ஐஐடிஎம் இருவாரத் திருவிழா'வையும் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் ஐஐடிஎம்களின் ஆய்வகங்கள் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை அணுக அனுமதிக்கும் வருடாந்திர தொழில்நுட்ப விழாவான சாஸ்த்ரா மற்றும் வருடாந்திர கலாச்சார விழாவான சாரங் ஆகியவை இதில அடங்கும்.
சாஸ்த்ரா 2026 ஜனவரி 2-ந் தேதி முதல் 6-ந்தேதி வரை நடைபெறும். அதே வேளையில், சாரங் 2026 ஜனவரி 8ந் தேதி முதல் 12ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, டீன் பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி, ஐஐடி மெட்ராஸ் குளோபல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. மாதவ் நாராயண் ஆகியோர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பிற பங்குதாரர்களுடன் டாக்டர் எஸ். ஜெய்சங்கரும் இந்நிகழ்வின்போது உற்சாகமான உரையாடலில் பங்கேற்றார்.
இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஐஐடி மெட்ராஸ், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) ஒட்டுமொத்தமாக முதலாவது இடத்தையும், முதலாவது பொறியியல் நிறுவனத்தையும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருகிறது. மேலும், QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 180-வது இடத்தையும், QS ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் 56-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த வலுவான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டு, ஐஐடி மெட்ராஸின் கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு பலங்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கான உத்திசார்ந்த, நிலையான, விரிவாக்கம் செய்யக்கூடிய தளமாக ஐஐடிஎம் குளோபல் கருதப்பட்டுள்ளது.
ஐஐடிஎம் குளோபல் அறிமுகத்தின் ஒரு பகுதியாக, முக்கிய உலகளாவிய பிராந்தியங்களில் உள்ள முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கூட்டாளர்களுடன் உயர்தாக்கத்தை ஏற்படுத்தும் தொடர்ச்சியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஐஐடி மெட்ராஸ் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவில் மூன்று, பிரிட்டிஷ் கூட்டரசில் ஒன்று, ஜெர்மனியில் மூன்று, துபாயில் மூன்று, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மூன்று, மற்றும் இந்தியா-உலகளாவிய முயற்சியின் கீழ் ஆறு ஆகியவை இதில் அடங்கும். கூட்டு ஆராய்ச்சி, தொழில், புத்தொழில் ஒத்துழைப்பு, உலகளாவிய திறமை மற்றும் அறிவுப் பரிமாற்றம், ஆழ்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றுவது ஆகியவற்றில் இக்கூட்டாண்மைகள் கவனம் செலுத்துகின்றன.
இந்த நிகழ்வில் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில், “ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்பது சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐஐடி மெட்ராஸின் உலகளாவிய தொடர்பு முயற்சியாகும். நான்கு அம்ச அணுகுமுறையை இது பின்பற்றுகிறது. முதலாவதாக, எங்களின் தொழில்நுட்பங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இரண்டாவதாக, இந்த நாடுகளின் திட்டங்களை கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தங்களின் கீழ் இங்கே கொண்டுவர திட்டமிட்டுள்ளோம், இதன் மூலம் எங்கள் ஆசிரியர்கள் உலகளாவிய சவால்களில் பணியாற்றவும் தீர்வுகளை வழங்கவும் முடியும். மூன்றாவதாக, இந்நாடுகளில் உள்ள வணிக வாய்ப்புகளுக்கு எங்கள் புத்தொழில் நிறுவனங்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். நான்காவதாக, எங்கள் புத்தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் வி.காமகோடி மேலும் கூறுகையில், "இந்த நான்கு துறைகளும் ஐஐடிஎம் குளோபலின் முக்கிய மையமாக அமைகின்றன. ஆரம்பத்தில், அமெரிக்கா, துபாய், மலேசியா, ஜெர்மனி உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருப்பை நிறுவ இருக்கிறோம். இதில் கிடைக்கும் வெற்றியின் அடிப்படையில், இம்முயற்சி மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்" என்றார்.
ஆழ்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறை கூட்டாளிகள் உலகளாவிய சந்தைகள், மூலதனம் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை அணுக உதவும் பிளக்-அண்ட்-ப்ளே' கட்டமைப்பாக ஐஐடிஎம் குளோபல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சூழலை சர்வதேச ஈடுபாட்டுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், உலகளாவிய தொழில்துறை- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்களுடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்புகளை வளர்க்கும் அதே வேளையில், கண்டுபிடிப்பு சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதை இத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ்-ன் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள், மேம்பட்ட உள்கட்டமைப்பு, வலுவான தொழில்துறை இணைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஐஐடிஎம் குளோபல் சமூக தாக்கத்தில் தெளிவான கவனம் செலுத்தி கண்டுபிடிப்புகளையும் தொழில்முனைவையும் விரைவுபடுத்த முயல்கிறது.
இந்த முயற்சி உலகளாவிய ஈடுபாட்டை ஆதரிக்கும் நான்கு முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது: வணிகமயமாக்கல், விரிவாக்கத்தை விரைவுபடுத்த துடிப்பான புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பது; சர்வதேச அளவில் கல்வி கற்போருக்கு ஆன்லைன் படிப்புகள்- பயிற்சி உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் திட்டங்களை வழங்குதல்; தரவு அறிவியல்- செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், சைபர் பாதுகாப்பு, பிளாக்செயின், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட இயக்கம், எரிசக்தி மற்றும் நீர் நிலைத்தன்மை, சுகாதார தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்நுட்பம் போன்ற களங்களில் அதிநவீன ஆராய்ச்சியையும் ஆலோசனையையும் மேம்படுத்துதல்; பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் காப்புரிமை வணிகமயமாக்கல்- தொழில்நுட்ப பரிமாற்றத்தை செயல்படுத்துதல்.
18 கல்வித் துறைகள், 15 சிறப்பு மையங்கள், 23 ஆராய்ச்சி மையங்கள், ஏறத்தாழ 100 தலைசிறந்த ஆய்வகங்களுடன், ஐஐடி மெட்ராஸ் உலகின் மிக விரிவான ஆராய்ச்சி- மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றை வழங்குகிறது. 650-க்கும் மேற்பட்ட ஆசிரிய உறுப்பினர்கள், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர் சமூகத்தின் பலம் காரணமாக இக்கல்வி நிறுவனத்தின் தொழில்துறையுடன் இணைந்த ஆராய்ச்சிக் கலாச்சாரம் அர்த்தமுள்ள உலகளாவிய ஒத்துழைப்புக்கு வலுவான அடித்தளத்தை வழங்கியிருக்கிறது.
வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், உலகளவில் அதிநவீன கண்டுபிடிப்புகளை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உலகம் ஐஐடி மதராஸுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை ஐஐடிஎம் குளோபல் மாற்றத் தயாராக உள்ளது. இக்கல்வி நிறுவனத்தின் சர்வதேச இருப்பை இம்முயற்சி வலுப்படுத்திக் கொள்வதுடன், சிறப்பான தனது பாரம்பரியத்தையும் தாக்கத்தையும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கும் கூட்டாளர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
****
TV/SH
(रिलीज़ आईडी: 2210985)
आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English