பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி விஞ்ஞான பவனில் நடைபெற்ற 16-வது தேசிய குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 APR 2023 3:06PM by PIB Chennai

எனது அமைச்சரவை நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு பி கே மிஸ்ரா அவர்களே, திரு ராஜீவ் கௌபா அவர்களே, திரு ஸ்ரீனிவாசன் அவர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைத்து செயல்வீரர்களே, நண்பர்களே மற்றும் தாய்மார்களே, பெரியோர்களே!

தேசிய குடிமைப் பணிகள்  தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த ஆண்டின் தேசிய குடிமைப் பணிகள்  தினம் என்பது மிகவும் முக்கியமானதாகும். இது, நாடு தனது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஒரு காலகட்டம். மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாபெரும் இலக்குகளை அடைவதற்காக நாடு அதிவேகமான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ள ஒரு காலகட்டமும் ஆகும்.

15, 20, 25 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சேவையில் இணைந்த அதிகாரிகள், நாட்டின் சுதந்திரத்தின் இந்த 'அமிர்த காலத்தை' அடைவதில் பெரும் பங்கு வகித்தனர். இப்போது, அடுத்த 15, 20, 25 ஆண்டுகளுக்கு இந்தச் சேவையில் இருக்கப் போகும் இளம் அதிகாரிகளுக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது. எனவே, இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமைப்பணி அதிகாரியிடமும் நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எனது இந்த வார்த்தைகளில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை, சிலர் தாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கூட நம்பலாம். அவரவர் எண்ணங்களுக்கு வாழ்த்துகள்.

இந்த காலகட்டத்தில் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது. சுதந்திரத்தின் இந்த 'அமிர்த காலத்தில்' நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவது நம் அனைவரின் பொறுப்பாகும். நமக்குக் குறைந்த நேரமே உள்ளது, ஆனால் அபரிமிதமான ஆற்றல் உள்ளது. நமது இலக்குகள் கடினமானவை, ஆனால் நமது மனவுறுதி சற்றும் குறையவில்லை. நாம் ஒரு மலையில் ஏற வேண்டியிருக்கலாம், ஆனால் நமது நோக்கங்கள் வானத்தை விடவும் உயர்ந்தவை.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் இன்று இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம், நமது நாட்டை ஒரு மிகப் பெரிய பாய்ச்சலுக்குத் தயார்ப்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள அதிகாரத்துவம் (பணியமைப்பு) ஒன்றுதான், அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்றுதான், ஆனால் முடிவுகள் மாறிவிட்டன என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. கடந்த ஒன்பது ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தால், உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானதாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டிலுள்ள ஏழை எளியவர்களும் நல்லாட்சி மீதான நம்பிக்கையைப் பெற்றிருந்தால், உங்கள் கடின உழைப்பு பலன் தந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி புதிய வேகத்தைப் பெற்றிருந்தால், அதுவும் உங்கள் பங்கேற்பு இல்லாமல் சாத்தியமாகியிருக்காது.

பெருந்தொற்று காலத்தில் இருந்தபோதிலும், இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இன்று நிதி தொழில்நுட்ப  உலகில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது, மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலகின் முதல் இடத்தில் உள்ளது. இன்று உலகில் மொபைல் டேட்டா குறைந்த விலையில கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இன்று உலகிலேயே மூன்றாவது பெரிய புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. இன்று நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது.

2014-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, இன்று நாட்டில் ரயில்வே தடங்களில் மின்மயமாக்கல் 10 மடங்கு வேகமாக நடைபெற்று வருகிறது. 2014-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, இன்று நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் இரட்டிப்பு வேகத்தில் கட்டப்படுகின்றன. 2014-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, நாட்டின் துறைமுகங்களில் திறன் மேம்பாடு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கை இன்று இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இன்று இங்கு வழங்கப்படும் விருதுகள், நாட்டின் வெற்றிக்கு உங்கள் பங்களிப்பை நிரூபிக்கின்றன, மேலும் உங்கள் சேவை உணர்வை வெளிப்படுத்துகின்றன. விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் நான் ஆற்றிய உரையின் போது, ஐந்து உறுதிமொழிகள்' குறித்து நான் வேண்டுகோள் விடுத்தேன். அவை – வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குதல் என்ற மாபெரும் இலக்கைக் கொண்டிருத்தல், அடிமைத்தன மனப்பான்மை அனைத்திலிருந்தும் விடுபடுதல், இந்தியாவின் பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொள்ளுதல், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தொடர்ந்து பலப்படுத்துதல், மற்றும் கடமைகளுக்கு மிக முக்கியத்துவம் அளித்தல் ஆகியனவாகும். இந்த ஐந்து உறுதிமொழிகளின் உத்வேகத்தால் வெளிப்படும் ஆற்றல், நமது நாட்டை அது எப்போதும் தகுதியான உயரத்திற்கு நிச்சயம் கொண்டு செல்லும்.

இந்த ஆண்டு குடிமைப்பணிகள் தினத்தின் மையப்பொருளை 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்று நீங்கள் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள சிந்தனை, இப்போது வெளியிடப்பட்ட புத்தகத்திலும் பிரதிபலிக்கிறது.

வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் நவீன உள்கட்டமைப்பு அல்லது நவீன கட்டுமானத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு, மத்திய அரசு ஒவ்வொரு குடிமகனின் லட்சியங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டியது அவசியம். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும் குடிமக்களின் கனவுகளை நனவாக்க உதவ வேண்டியது அவசியம். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு, கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் அமைப்புடன் தொடர்புடைய எதிர்மறையான சிந்தனைகள் நேர்மறையாக மாற்றப்பட வேண்டும், மேலும் நமது அமைப்பு, குடிமக்களுக்கு ஒரு உறுதுணையாக இருந்து தனது பங்கை நிறைவேற்ற வேண்டும்.

 

நண்பர்களே,

சுதந்திரத்திற்குப் பிறகு நமது பல தசாப்த கால அனுபவம் என்னவென்றால், திட்டங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அதற்கான  திட்டமிடுதல் எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், கடைகோடி மனிதர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படாவிட்டால், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் கிடைக்காது.

முந்தைய அமைப்பின் காரணமாகத்தான் நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமான போலி எரிவாயு இணைப்புகள் இருந்தன என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். முந்தைய அமைப்பின் காரணமாகத்தான் நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமான போலி ரேஷன் அட்டைகள் இருந்தன. முந்தைய அமைப்பின் காரணமாகத்தான், நாட்டில் ஒரு கோடி கற்பனையான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உதவி செய்து வந்தது. முந்தைய அமைப்பின் காரணமாகத்தான், சிறுபான்மையினர் நல அமைச்சகம் சுமார் 30 லட்சம் போலி இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிக் கொண்டிருந்தது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாட்டில் லட்சக்கணக்கான போலி வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டு, உண்மையில் இல்லாத லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பணம் மாற்றப்பட்டது என்பதும் முந்தைய அமைப்பின் விளைவே ஆகும்.

நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், பிறக்காத, காகிதத்தில் மட்டுமே பிறந்த, லட்சக்கணக்கான கோடிக்கணக்கான போலிப் பெயர்களின் மறைவில் ஊழலில் ஒரு பெரிய சுற்றுச்சூழல் அமைப்பு ஈடுபட்டிருந்தது. இன்று, நாட்டின் மற்றும் உங்கள் அனைவரின் கூட்டு முயற்சியால், இந்த அமைப்பு மாற்றப்பட்டுள்ளதுடன், நாட்டின் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் தவறான கைகளுக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனைக்காக நீங்கள் அனைவரும் வாழ்த்துக்குரியவர்கள். இன்று இந்த பணம் ஏழைகளின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நண்பர்களே,

நேரம் குறைவாக இருக்கும்போது, நமது திசை என்னவாக இருக்கும், நமது செயல்திசை  என்னவாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பது மிக முக்கியமாகிறது. இன்று சவால் என்பது, நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்பதல்ல, மாறாக, குறைபாட்டை எவ்வாறு நீக்குவது என்பதைத் தீர்மானிப்பதே சவாலாகும். நமது திசை சரியாக இருந்தால், திறமையின் வலிமை அதிகரிக்கும், நாம் முன்னேறுவோம். ஆனால், குறைபாடு இருந்தால், நாம் விரும்பிய முடிவுகளைப் பெற மாட்டோம்.

முன்னர், குறைபாட்டின் போர்வையில், ஒவ்வொரு துறையிலும் மிகச் சிறிய விஷயங்களைக் கூடக் கட்டுப்படுத்த புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதை நீங்கள் நினைவில் கொள்ளலாம். ஆனால் இன்று அதே குறைபாடு, திறமையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று அதே திறமை, கொள்கை தொடர்பான மிகச் சிறிய தடைகளைக் கூட அடையாளம் கண்டு, அவற்றை நீக்குகிறது. முன்னதாக, 'அரசே எல்லாவற்றையும் செய்யும்' என்ற அணுகுமுறை இருந்தது, ஆனால் இப்போது 'அரசு அனைவருக்கும் வேலை செய்யும்' என்ற சிந்தனை உள்ளது.

இப்போது அரசு 'அனைவருக்கும்' வேலை செய்யும் உணர்வுடன் நேரத்தையும் வளங்களையும் திறமையாகப் பயன்படுத்துகிறது. இன்றைய அரசின் குறிக்கோள் – தேசமே முதலில் - குடிமக்களே முதலில் என்பதாகும். இன்றைய அரசின் முன்னுரிமை, பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகும். இன்று, நிர்வாகம் வளர்ந்துவரும் மாவட்டங்கள் மற்றும் வளர்ந்துவரும் வட்டாரங்கள் வரை சென்றடைந்துள்ளது. தற்போது அரசு, நாட்டின் எல்லைக் கிராமங்களை கடைசி கிராமங்களாகக் கருதாமல், முதல் கிராமங்களாகக் கருதுகிறது, மேலும் துடிப்பான கிராமங்கள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக இதுவே நமது அரசின் முக்கியமான சிறப்பம்சமாக இருந்துள்ளது.

ஆனால் நாம் எப்போதும் மற்றொரு விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும், மேலும் 100 சதவீதம் திருப்தி அடைவதற்காக தொடர்ந்து புதுமையான தீர்வுகளைக் கண்டறிய வேண்டிய தேவை உள்ளது. இப்போது டிஜிட்டல் இந்தியாவின் இவ்வளவு பெரிய உள்கட்டமைப்பு நம்மிடம் இருக்கும்போதும், நம்மிடம் இவ்வளவு அதிகமான தரவுகள்  இருக்கும்போதும், நாம் இன்னும் பார்க்கிறோம், ஒவ்வொரு துறையும் ஏற்கனவே ஏதோ ஒரு தரவுத்தளத்தில் இருக்கும் அதே தகவலை, அதே ஆவணங்களைக் கேட்கிறது.

  ஆட்சேபனை இல்லா சான்றிதழ், சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்கள் போன்றவற்றைக் கொடுப்பதில் நிறைய நிர்வாக நேரம் வீணாகிறது. இவற்றுக்கான தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கைத் தரம் எளிதாகும் , அப்போதுதான் எளிதாக வணிகம் செய்ய முடியும்.

பிரதமரின் கதிசக்தி தேசிய முன்னோடி திட்டத்தை ஒரு உதாரணமாக உங்களுக்குக் தெரிவிக்க விரும்புகிறேன். இதன் கீழ், அனைத்து வகையான உள்கட்டமைப்பு தொடர்பான தரவு அடுக்குகளும் ஒரே தளத்தில் கிடைக்கின்றன. நாம் இதை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகத் துறையிலும் சிறந்த திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்காக நாம் பிரதமரின் கதிசக்தியை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும். இது மக்களின் தேவைகளை அடையாளம் காணவும், செயல்படுத்துவதில் உள்ள சிரமங்களை நீக்கவும் நமக்கு உதவும். இது துறைகளுக்கு இடையேயும், மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு இடையேயும் உள்ள தகவல்தொடர்பை மேலும் எளிதாக்கும். மேலும், இது எதிர்கால உத்திகளை வகுப்பதையும் நமக்கு எளிதாக்கும்.

நண்பர்களே,

சுதந்திரத்தின் இந்த அமுத காலம், இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளதுடன், சமமான அளவிற்கு சவாலானதாகவும் உள்ளது. இவ்வளவு சாதனைகள் இருந்தபோதிலும், துரிதமான வளர்ச்சி இருந்தபோதிலும், இதை ஏன் ஒரு சவால் என்று நான் அழைக்கிறேன்? நீங்களும் இதை நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று, இந்திய மக்களின் விருப்பங்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்காகவும், அமைப்பு மாறுவதற்காகவும் நாட்டு மக்கள் இனியும் காத்திருக்க விரும்பவில்லை.

நாட்டின் மக்களின் இந்த விருப்பங்களை நிறைவேற்ற, நாம் அனைவரும் நமது முழு பலத்தையும் திரட்டி செயல்பட வேண்டும். முடிவுகளை விரைவாக எடுக்க வேண்டும், மேலும் அந்த முடிவுகளை முடிந்தவரை வேகமாகச் செயல்படுத்த வேண்டும். இதை நான் சொல்வதால் மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்புகளும் இந்தியாவை நோக்கி வெகுவாக அதிகரித்துள்ளதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

உலகெங்கிலும் உள்ள நிபுணர்களும், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும், "இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டது" என்று கூறுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்திய நிர்வாகம் ஒரு நொடியைக் கூட வீணடிக்கக் கூடாது. இன்று, நான் இந்திய நிர்வாகத்திடம், மாநில அரசிலோ அல்லது மத்திய அரசிலோ உள்ள ஒவ்வொரு இந்திய அரசு ஊழியரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். நாடு உங்கள் மீது அதிக நம்பிக்கையை வைத்துள்ளதுடன், உங்களுக்கு ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது. எனவே, அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு நீங்கள் வாழ வேண்டும், பணியாற்றுங்கள்.

உங்கள் சேவையில், உங்களின் முடிவுகளுக்கு அடிப்படையாக நாட்டின் நலன் மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி உங்களிடம் கூறுவதுண்டு. ஒரு தனி நபருக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ நீங்கள் முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வரக்கூடும், ஆனால் அப்போதும், உங்கள் முடிவு, அது சிறியதாக இருந்தாலும், நாட்டின் நலனுக்காக எப்படி இருக்கும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்களுக்கான அளவுகோல் நாட்டின் நலனே ஆகும்.

நண்பர்களே,

எந்தவொரு ஜனநாயகத்திலும் அரசியல் கட்சிகள் மிக முக்கியமானவை, அது அவசியமானதும் கூட. இதுவே ஜனநாயகத்தின் அழகு. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த சித்தாந்தம் உள்ளது, அதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு கட்சிக்கும் வழங்கியுள்ளது.

ஆனால், ஒரு நிர்வாகியாக, ஒரு அரசு ஊழியராக இருக்கும் நீங்கள், இப்போது உங்கள் ஒவ்வொரு முடிவிலும் சில கேள்விகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்: அதிகாரத்திற்கு வந்துள்ள அரசியல் கட்சி, வரி செலுத்துவோரின் பணத்தைத் தனக்காகப் பயன்படுத்துகிறதா, அல்லது நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்துகிறதா? நண்பர்களே, நீங்கள் இதைக் கவனிக்க வேண்டும். அந்த அரசியல் கட்சி அரசின் பணத்தை அதன் விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்துகிறதா, அல்லது நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துகிறதா? அந்த அரசியல் கட்சி தனது வாக்கு வங்கியை உருவாக்க அரசின் பணத்தைக் கொள்ளையடிக்கிறதா, அல்லது அனைவரின் வாழ்க்கையை எளிதாக்க உழைக்கிறதா? அந்த அரசியல் கட்சி அரசின் பணத்தைக் கொண்டு தன்னைத்தானே ஊக்குவிக்கிறதா, அல்லது நேர்மையாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா? அந்த அரசியல் கட்சி அதன் சொந்த பணியாளர்களை பல்வேறு அமைப்புகளில் நியமிக்கிறதா, அல்லது வெளிப்படையான முறையில் அனைவருக்கும் வேலைகளைப் பெற சம வாய்ப்பை வழங்குகிறதா? அந்த அரசியல் கட்சி அதன் எஜமானர்களுக்குக் கறுப்புப் பணத்திற்கான புதிய வழிகளை உருவாக்க, கொள்கைகளில் மாற்றங்களைச் செய்யவில்லையா? நீங்கள் ஒவ்வொரு முடிவெடுக்கும் முன்னரும் இந்த எல்லா கேள்விகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். சர்தார் படேல் இந்தியாவின் எஃகுச் கட்டமைப்பு என்று எந்த நிர்வாகத்தைக் குறிப்பிட்டாரோ, அதே நிர்வாகம் அவரது எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப வாழ வேண்டும். ஏனெனில், இப்போது நிர்வாகத்தில் ஏதேனும் தவறு நடந்தால், நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்படும், வரி செலுத்துவோரின் பணம் அழிக்கப்படும், மேலும் நாட்டின் இளைஞர்களின் கனவுகள் சிதைக்கப்படும்.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளாகவோ அல்லது கடந்த பத்தாண்டுகளாகவோ நாட்டின் சிவில் சேவையில் இணைந்துள்ள இளைஞர்களுக்கு நான் சில விஷயங்களைச் சிறப்பாகச் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கையை வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன என்பதை நீங்களும் அறிவீர்கள். முதலாவது 'செயல்படுத்துதல்' மற்றும் இரண்டாவது 'நிகழ அனுமதித்தல்'. முதலாவது ஒரு செயலூக்கமான அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும், இரண்டாவது ஒரு மந்தமான அணுகுமுறையாகும்.

முதல் வழியை விரும்புபவர், ஆம், மாற்றம் வர முடியும் என்று நினைக்கிறார். இரண்டாவது முறையை நம்புபவர், 'சரி, போகட்டும், எல்லாம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது, முன்னரும் இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது, இப்படியே தொடரும், தானாகவே சரியாகிவிடும்' என்று சொல்கிறார். 'செயல்படுத்துவதில்' நம்பிக்கை கொண்டவர்கள் முன்வந்து பொறுப்பை ஏற்கிறார்கள். அவர்கள் ஒரு குழுவில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்கள் ஒரு இயக்கு சக்தியாக மாறுகிறார்கள். மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற இத்தகைய நோக்கத்துடன், நீங்கள் பலரால் நினைவுகூரப்படும் ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்வீர்கள்.

ஒரு அதிகாரியாக உங்கள் வெற்றி, நீங்கள் உங்களுக்காக எதைச் சாதித்தீர்கள் என்பதைக் கொண்டு அளவிடப்படாது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வெற்றி, உங்கள் பணி மற்றவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைக் கொண்டே அளவிடப்படும். யாருடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு நீங்கள் பொறுப்பாளியாக இருந்தீர்களோ, அந்த மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? எனவே, நீங்கள் எப்போதும் 'நல்லாட்சிதான் திறவுகோல்' என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மக்களை மையப்படுத்திய ஆட்சி இருக்கும்போது, வளர்ச்சி நோக்கிய ஆட்சி இருக்கும்போதும், அது பிரச்சனைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், சிறந்த விளைவுகளையும் தருகிறது. நல்லாட்சியில் பொதுமக்களிடம் பொறுப்புக்கூறல் உள்ளது. ஒரே மாநிலத்தில் ஒரு மாவட்டம் சிறப்பாகச் செயல்படும்போது, மற்றொன்று செயல்பட வில்லை என்றால், அதற்குக் உண்மையான காரணம், நல்லாட்சியில் உள்ள வேறுபாடுதான்.

வளர்ந்து வரும் மாவட்டங்கள் நமக்கு முன்னால் உதாரணங்களாக உள்ளன. அங்கு ஆர்வத்தால் நிறைந்த நாட்டின் இளம் அதிகாரிகளை நியமித்து, நல்லாட்சிக்காக அவர்களை ஊக்குவித்தபோது, முடிவுகளும் மிகச் சிறப்பாக வந்தன. இன்று, நாட்டின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது பல ஆர்வமூட்டும் மாவட்டங்கள் வளர்ச்சி அளவுகோல்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

நீங்கள் மக்கள் பங்கேற்பில் கவனம் செலுத்தும்போது, பொது மக்களிடையே உரிமை உணர்வும் வலுப்பெறும். மக்கள் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டு உரிமைகொள்ளும்போது, முன்னெப்போதும் இல்லாத முடிவுகள் வருவது உறுதி. தூய்மை இந்தியா இயக்கம், நீராதாரங்களை பாதுகாக்கும் திட்டம்,  குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற வடிவங்களில் உங்களுக்கு உதாரணங்கள் உள்ளன. அவற்றின் வெற்றிக்கு முக்கிய அடிப்படை, பொதுமக்களின் உரிமையுணர்வே ஆகும்.

நண்பர்களே,

உங்கள் மாவட்டத்தின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு நீங்கள் மாவட்ட பார்வை 100 என்ற திட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வை பஞ்சாயத்துகள் வரை செல்ல வேண்டும். நமது கிராம பஞ்சாயத்து, நமது வட்டாரம், நமது மாவட்டம், நமது மாநிலத்தில் எந்தத் துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்? முதலீடுகளை ஈர்ப்பதற்கு என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்? நமது மாவட்டம், வட்டாரம் அல்லது பஞ்சாயத்தில் ஏற்றுமதி செய்யக்கூடிய தயாரிப்புகள் என்னென்ன? இவை குறித்து நமக்குத் தெளிவான பார்வை இருக்க வேண்டும்.

உங்கள் பகுதியில் உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்த நீங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை இணைக்கலாம். உள்ளூர் திறமையை ஊக்குவித்தல், உள்ளூர் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்தல் மற்றும் புத்தொழில் மேம்படுத்துதல் ஆகியவை உங்கள் அனைவருக்கும் காலத்தின் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன்.

நண்பர்களே,

நான் அரசின் தலைவராக இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. உங்களில் பலர் என்னுடன் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறீர்கள். உங்களைப் போன்ற சகாக்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் பெருமை கொள்கிறேன். நான் எப்போதும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

இன்று 'செயல்வீரர்கள் இயக்கம்' அனைத்து குடிமைப்பணி பணியாளர்கள் மத்தியிலும் ஒரு மிகப் பெரிய இயக்கமாக மாறியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 'இந்த இயக்கத்தின் நோக்கம், குடிமைப் பணியாளர்களின் முழுத் திறனையும் பயன்படுத்துவதாகும். திறன் மேம்பாட்டு ஆணையம் இந்த இயக்கத்தை முழு பலத்துடன் முன்னோக்கிக் கொண்டு செல்கிறது.

பயிற்சி மற்றும் கற்றல் என்பது சில மாதங்களுக்கான சம்பிரதாயமாக இருக்கக் கூடாது என்றும் நான் நம்புகிறேன். எனவே, பயிற்சி மற்றும் கற்றல் தொடர்பான தரமான உள்ளடக்கம் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஐ-காட் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஐ-காட் தளத்தில் உள்ள 'கர்மயோகி பிராரம்ப’ என்ற வழிகாட்டுதல் பாடத்திட்டம் மூலமாகவும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

நண்பர்களே,

பல ஆண்டுகளாக, அரசு மேலும் ஒரு தளைகளில் இருந்து விடுவித்துள்ளது. அதுதான் நெறிமுறைகள் மற்றும் படிநிலை அமைப்பு என்ற பிணைப்பு. படிநிலைத் தளைகளை உடைக்கும் பணியை நானே தொடங்கியுள்ளேன். நான் தொடர்ந்து செயலாளர்கள் மற்றும் உதவிச் செயலாளர்களைச் சந்தித்து வருகிறேன். பயிற்சி பெறும் அதிகாரிகளையும் நான் சந்திக்கிறேன். புதிய யோசனைகளுக்காகவும், துறைக்குள் அனைவரின் பங்கேற்பை அதிகரிக்கவும் மத்திய அரசில் கருத்துப்பரிமாற்ற முகாம்களையும் ஊக்குவித்தோம்.

நமது முயற்சிகள் காரணமாக மற்றொரு பெரிய மாற்றமும் வந்துள்ளது. முன்னதாக, அதிகாரிகள் மாநிலங்களில் கணிசமான காலத்தைச் செலவிட்ட பிறகுதான் மத்திய அரசில் பணியிடமாற்றம் மூலம் பணிபுரியும் அனுபவத்தைப் பெறுவார்கள். இந்த அதிகாரிகளுக்கு மத்திய அரசில் பணிபுரிந்த அனுபவம் இல்லாவிட்டால், மத்திய அரசின் திட்டங்களை அவர்கள் எவ்வாறு செயல்படுத்துவார்கள் என்று யாரும் சிந்திக்கவில்லை. இந்த இடைவெளியை உதவிச் செயலாளர் திட்டம் மூலம் நிரப்ப முயற்சி செய்தோம். இப்போது, இளம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு அவர்களின் பணியின் ஆரம்ப ஆண்டிலேயே மத்திய அரசில் பணிபுரியவும் அனுபவத்தைப் பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது. மிக மூத்தவர்களிடமிருந்து அவர் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இத்தகைய புதுமைகளை நாம் முன்னோக்கிக் கொண்டு சென்று, இந்த முயற்சிகளை முடிவுகளின் உச்சத்தை நோக்கி கொண்டு செல்ல நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

நண்பர்களே,

நாடு இந்த 25 ஆண்டுகளின் அமிர்த கால பயணத்தை வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான கடமைகளின் காலமாகக் கருதுகிறது. சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா, நாட்டின் பொன் நூற்றாண்டு, நாம் நமது கடமைகளுக்கு முதலிடம் கொடுக்கும்போதுதான் சாத்தியமாகும். கடமை நமக்கு ஒரு வாய்ப்பு அல்ல, அது ஒரு தீர்மானம். இது விரைவான மாற்றத்தின் காலம். உங்கள் உரிமைகளால் அல்ல, மாறாக உங்கள் கடமைகள் மற்றும் உங்கள் செயல்திறனால் உங்கள் பங்கும் தீர்மானிக்கப்படும்.

புதிய இந்தியாவில் நாட்டின் குடிமக்களின் சக்தி அதிகரித்துள்ளது, அதனுடன் இந்தியாவின் சக்தியும் அதிகரித்துள்ளது. இந்த புதிய வளர்ந்து வரும் இந்தியாவில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது. சுதந்திரத்தின் 100 ஆண்டுக ளுக்குப் பிறகு வரலாறு ஒரு மதிப்பீட்டை மேற்கொள்ளும்போது, அதில் உங்கள் பெயர் முக்கியமாக இடம்பெற உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நாட்டிற்காக புதிய அமைப்புகளை உருவாக்குவதிலும், அமைப்புகளை மேம்படுத்துவதிலும் நீங்கள் ஒரு பங்கை ஆற்றியுள்ளீர்கள் என்று நீங்கள் பெருமையுடன் சொல்ல முடியும்.

தேசத்தைக் கட்டமைப்பதில் உங்கள் பங்கை நீங்கள் அனைவரும் தொடர்ந்து விரிவுபடுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். நமக்காகவும், நமது சகாக்களுக்காகவும், அமைப்புக்காகவும் ஒவ்வொரு கணமும், திறன் மேம்பாடு என்பது நமது முயற்சியாக இருக்க வேண்டும். புதிய உயரங்களை விஞ்ச நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த குடிமைப் பணிகள்  தினம் ஒரு வருடாந்திர சடங்கு அல்ல என்று நான் நம்புகிறேன். இந்த குடிமைப் பணிகள்  தினம் தீர்மானங்களுக்கான நேரம். இந்த குடிமைப் பணிகள் தினம், புதிய முடிவுகளுக்கான நேரம். இது முடிவுகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் செயல்படுத்தும் ஒரு சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தில் இருந்து ஒரு புதிய ஆற்றல், புதிய உத்வேகம், புதிய சக்தி, புதிய வலிமை, புதிய உறுதியுடன் நாம் முன்னோக்கி நகர்ந்தால், நாம் விரும்புவதை நிச்சயமாக அடைவோம். இந்த நம்பிக்கையுடன், நான் உங்களுக்கு மனதார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

***

(Release ID:1918531)

SS/SMB/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2202888) வருகையாளர் எண்ணிக்கை : 20