சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

துல்லியமான சுகாதாரம், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத் திறன் மேம்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடிக்கு ரூ.10.83 கோடி நிதியுதவி வழங்க இந்திய ரயில்வே நிதிக் கழகம் அனுமதி

Posted On: 17 NOV 2025 5:37PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி சென்னை), நாட்டிலேயே முதலாவது 'ஒற்றை செல் ஒமிக்ஸ் பயன்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவ, நவரத்ன பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே நிதிக் கழகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.


இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (நவம்பர் 17, 2025) தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி ஆய்வகம், நாட்டின் துல்லியமான சுகாதாரச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையைக் குறிக்கிறது. பொது சுகாதார முன்னேற்றத்திற்காக பொறியியல் மற்றும் மருத்துவத்தை இணைப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும்.


அதிநவீன கருவிகளுடன் கூடிய ஸ்காட் ஆய்வகம், புற்றுநோய், இருதய நோய், தொற்று, அழற்சி, வளர்சிதை மாற்றம், இதர தொற்றாத நோய்கள் போன்றவற்றுக்கு ஆரம்பகால நோயறிதல், நோய் முன்கணிப்பு,  மருந்து பரிசோதனை ஆகியவற்றை எளிதாக்கும்.


இந்திய ரயில்வே நிதிக்கழகம் வழங்கும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியைக் கொண்டு, சென்னை ஐஐடி-ல் அதிநவீன ஆய்வகத்தை மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைக்கும். ஒற்றை செல் உயிரியல், மருந்து கண்டுபிடிப்பு,  சுகாதார புதுமைக் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்காக இந்த ஆய்வகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சுகாதாரப் பராமரிப்பு போன்ற முக்கிய துறைகளில் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' திட்டத்தை முன்னெடுப்பதற்கு இதுபோன்ற ஆய்வகங்கள் தேவை எனக் குறிப்பிட்ட சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் துல்லியமான மருத்துவத்தில் இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்த இந்திய ரயில்வே நிதிக் கழகத்துடனான தங்கள் கூட்டுமுயற்சி முக்கிய மைல்கல்லாகும் என்று தெரிவித்தார். பொறியியல், மருத்துவ அறிவியல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் சென்னை ஐஐடி முன்னணியில் உள்ளது என்றும், இந்த அதிநவீன  ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க கால நோயறிதல், மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை, அடுத்த தலைமுறை சுகாதார புதுமை கண்டுபிடிப்புகளில் நாட்டின் திறன்களுக்கான தீர்வுகளை உருவாக்கும் தங்கள் திறனை பெரிதும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.


மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190886&reg=3&lang=1 

 

***

SS/IR/LDN/RK


(Release ID: 2190909) Visitor Counter : 15
Read this release in: English