சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருச்சி அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
14 NOV 2025 7:22PM by PIB Chennai

மத்திய மண்டலம், திருச்சிராப்பள்ளி அஞ்சல் துறை சார்பாக ஆதார் சிறப்பு முகாம், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெறுகிறது. பொது மக்கள் நலன் கருதி அனைவரும் பயன் அடையும் இந்த முகாம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் அடையாள அட்டையில் தேவையான தகவல்களை புதுப்பித்தல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆதார் அட்டை பெறுவதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. குழந்தைகளுக்கு ஆதார் எண் பெற, குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை அவசியம் என்று அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
ஆதார் அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றங்களை மேற்கொள்வதற்கு 75 ரூபாய் கட்டணமாகவும், புகைப்படம் மற்றும் கைரேகை போன்ற தரவுகளை புதுப்பிப்பதற்கு 125 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
பெயர் மாற்றம் செய்வதற்கு பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய திருமண சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் அவசியமாகும்.
பிறந்த தேதி மாற்றம் செய்வதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் முக்கிய ஆவணங்களாகும்.
முகவரி மாற்றம் செய்வதற்கு பாஸ்போர்ட், அஞ்சல் அலுவலக அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆயுள் காப்பீட்டு சான்றிதழ், மூன்று மாதத்திற்கு உட்பட்ட மின்கட்டண ரசீது, சமையல் எரிவாயு ரசீது மற்றும் குடிநீர் வரி ரசீது போன்ற ஏதேனும் ஆவணத்தை சமர்ப்பிப்பது அவசியமாகும்.
மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒரு அசல் ஆவணம், தேவைப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கொண்டு வர வேண்டும்.
இந்தப் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் நடைபெறும் இந்த முகாமை அரிய வாய்ப்பாகக் கருதி பொது மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மண்டல அஞ்சல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
***
SS/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2190175)
வருகையாளர் எண்ணிக்கை : 18