சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜிப்மர் கிராம சுகாதார மையத்திற்கு தேசிய தரநிலை சான்றிதழ்
இடுகை இடப்பட்ட நாள்:
22 OCT 2025 12:29PM by PIB Chennai
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையின் கீழ், ராமநாதபுரத்தில் செயல்படும் ஜிப்மர் கிராம சுகாதார மையம், தேசிய தரநிலை சான்றிதழ் பெற்று பாராட்டுக்குரிய மைல்கல்லை எட்டியுள்ளது. தேசிய அளவிலான கடுமையான வெளிமதிப்பீட்டில் 91.05 சதவீத மதிப்பெண் பெற்று இந்த சான்றிதழை அந்த கிராம சுகாதார மையம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை மூலம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்த சான்றிதழைப் பெறும் முதலாவது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையமாக இது விளங்குகிறது. இந்தப் பகுதியில் தரமான ஆரம்ப சுகாதார கவனிப்பை வலுப்படுத்துவதில் இது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இந்த சாதனைப் பற்றி கருத்துத் தெரிவித்த ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, இந்த அங்கீகாரம் ஜிப்மருக்கு பெருமையான தருணம் என்றும் ஆரம்ப சுகாதார கவனிப்பில் தரமான, புத்தாக்க நிலையில் எங்களின் தொடர் முயற்சிக்கு இது ஒரு சான்றாகும் என்றும் கூறினார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகள் மற்றும் பயிற்சிக்கு ஜிப்மரின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராமநாதபுரம், தொண்டமாநத்தம், தூத்திப்பேட்டை, பிள்ளையார்குப்பம் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த 11,200 குடியிருப்புதாரர்களுக்கு 24 மணி நேர சேவையை ராமநாதபுரம் கிராம சுகாதார மையம் வழங்குகிறது. குருசுகுப்பம், நகர்ப்புற சுகாதார மையம், சுமார் 9,000 மக்கள் தொகைக்கு சேவை செய்கிறது. இந்த மையம் மாநில அளவிலான மதிப்பீடுகளில் சிறந்து விளங்குவதோடு வரவிருக்கும் தேசிய அளவிலான மதிப்பீட்டுக்கும் செல்லவிருக்கிறது.
இந்த இரு மையங்களும் வாராந்தர யோகா அமர்வுகளை நடத்துவதோடு தொலைதூர ஆலோசனை சேவைகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆகியவற்றையும் தேசிய சுகாதார முன்முயற்சிகளுக்கு இணங்க நடத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181446
***
SS/SMB/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2181477)
வருகையாளர் எண்ணிக்கை : 42