சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் சி-டாக் இணைந்து தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்நுட்ப திறன் மையம் & சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2025 11:28PM by PIB Chennai
டிஜிட்டல் திறன் மேம்பாடு மற்றும் பணியாளர் அதிகாரமளிப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மெப்ஸ்–சி -டாக் தகவல் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் & சிறப்பு மையம் இன்று சென்னையில் உள்ள மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொடங்கப்பட்டது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மெப்ஸ்-இன் மேம்பாட்டு ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன், எல்காட் மேலாண் இயக்குநர் டாக்டர் கே.பி. கார்த்திகேயன், சி -டாக்-இன் தலைமை இயக்குநர் திரு இ. மகேஷ் மற்றும் பெங்களூரு சி -டாக்-இன் மேலாண் இயக்குநர் டாக்டர் எஸ்.டி. சுதர்சன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நவீன மாற்றங்களுக்கேற்ற தொழில்நுட்பம், தலைமைத்துவம் மற்றும் ஒழுங்குமுறை நிபுணத்துவம் ஆகியவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை எடுத்துக்காட்டும் தொழில்துறை நுண்ணறிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் புதிய பட்டதாரிகளுக்கு, கட்டமைக்கப்பட்ட, நேரடி பயிற்சியை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் அதன் முதன்மைத் திட்டங்கள், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலுடன் இணைந்த தொழில்துறை சார்ந்த, திட்ட அடிப்படையிலான திறன்களுடன் பங்கேற்பாளர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.

"இந்த மையம் புதுமை மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ஒரு முக்கிய கருவியாக செயல்படும். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதில் பிராந்திய கண்டுபிடிப்பு மையங்களின் முக்கியத்துவத்தை இது பிரதிபலிக்கிறது. மேலும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையிலான பாலத்தை வலுப்படுத்துகிறது," என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன் கூறினார். தொழில்நுட்ப மாற்றத்தின் வேகத்தை அதிகரிப்பது குறித்தும் அவர் பேசினார், இது தொடர்ச்சியான திறன் மேம்பாடு மற்றும் மறு திறன் மேம்பாட்டை அவசியமாக்குகிறது, என்றார்.

மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் சி-டாக் ஆகியவை இணைந்து, டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் திறன் கண்டுபிடிப்புகளுக்கான ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி வருகின்றன. இது தொழில்நுட்ப சிறப்பிற்கும் எதிர்காலத் தயார்நிலை திறமைக்கும் முன்னணி மையமாக தமிழ்நாட்டின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
AD/BR
(வெளியீட்டு அடையாள எண்: 2180619)
வருகையாளர் எண்ணிக்கை : 44