PIB Headquarters
கோவாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்
Posted On:
12 OCT 2025 1:30PM by PIB Chennai
கோவாவின் பொருளாதாரம், சுற்றுலா, பாரம்பரிய தொழில்கள், நவீன நிறுவனங்கள் ஆகியவற்றின் கலவையாக செழித்து வளர்கிறது. கோவாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை மட்டுமே கிட்டத்தட்ட 16% ஆகும். அதே நேரத்தில் மருந்துகள், மீன்வளம், முந்திரி பதப்படுத்துதல், கைவினைப்பொருட்கள் போன்றவையும் ஏராளமான வாழ்வாதாரங்களை வழங்குகின்றன.
சமீபத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் இந்தப் பன்முகத்தன்மை கொண்ட கோவா மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதாகவும், மலிவு விலையில் சேவைகளை வழங்குவதாகவும், உள்ளீட்டுச் செலவுகளைக் குறைப்பதாகவும், பல துறைகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
* புதிய ஜிஎஸ்டி விகிதங்கள், வடக்கு கோவாவின் கடற்கரைப் பகுதிகளான கலங்குட், கண்டோலிம், பாகா, அஞ்சுனா, பனாஜி, தெற்கு கோவா பகுதிகளான கோல்வா, பெனாலிம், பலோலெம் ஆகியவற்றை உள்ளடக்கிய கோவாவின் வலுவான சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாவில், இந்தத் துறையில் சுமார் 2.5 லட்சம் பேர் பணியில் உள்ளனர். ஜிஎஸ்டி விகிதக் குறைப்பால், உள்ளீட்டுச் செலவுகள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் போன்றவற்றிக்கு 18%-லிருந்து 5%-மாக வரி குறையும்போது, அவற்றின் விலை உத்தேசமாக 11% குறையும்.
கோவாவில் உள்ள உணவகங்கள், கடற்கரை தங்குமிடங்கள், பழச்சாறு நிலையங்கள் போன்றவற்றின் சேவைகள் மீதான ஜிஎஸ்டி 12% என்ற நிலையில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டதன் மூலம் இவை பெரிய அளவில் பயனடைய உள்ளன.
ஜிஎஸ்டி குறைப்பு தொழில் துறை செலவுகளை உத்தேசமாக 6.25% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நுகர்வோருக்கு மலிவு விலையில் பொருட்கள் கிடைப்பதை அதிகரிக்கும். இது சிறு விற்பனையாளர்களுக்கான விற்பனையையும் அதிகரிக்கும். உள்ளூர் தொழில்முனைவோரின் வருவாயை மேம்படுத்தும்.
கோவாவில் உள்ள ஆட்டோ, டாக்ஸி, பைக் வாடகை சூழல் அமைப்பும் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்கள் மீதான வரிக் குறைப்பு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடலோரப் பகுதிகளில் இயங்கும் டாக்சி தொழிற்சங்கங்களுக்கும் வாடகை நிறுவனங்களுக்கும் நேரடியாகப் பலன் அளிக்கும்.
கோவாவில் மருந்துத் தொழிலில் 75,000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். கோவாவின் மொத்த வணிக ஏற்றுமதியில் மருந்துகள் 51% பங்கை கொண்டுள்ளன.
திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களில், மருந்து தொடர்பான பல உள்ளீடுகளுக்கும் சேவைகளுக்கும் 18% வரி, 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சில மருத்துவப் பொருட்களின் வரி பூஜ்ஜியமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் விலைகளை சுமார் 11% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாவில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறையும் சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் ஆதாயமடைந்துள்ளது. சிமெண்ட் மீதான வரி விகிதம் 28%-லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுமானப் பொருட்களின் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தங்கள் கோவா முழுவதும் ரியல் எஸ்டேட், ஹோட்டல் திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு மற்றும் தங்குமிட மேம்பாடுகளுக்கும் பயனளிக்கின்றன.
கோவாவில் உள்ள மீன்வளம் மற்றும் கடல் உணவு மதிப்புச் சங்கிலி, இப்போது 5% குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்தால் பயனடைகிறது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மதிப்புச் சங்கிலி முழுவதும் பெரிய பயனைக் கொண்டு வந்துள்ளன. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் கோவாவின் பன்முகத்தன்மை கொண்ட பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் பயனளிக்கும் வகையில் உள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றங்கள் நுகர்வோருக்கு விலைக்குறைப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற, நகர்ப்புற தொழில்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் சுற்றுலாவை அதிகம் சார்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ள கோவாவின் பொருளாதாரம் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் கணிசமாகப் பயனடையும்.
****
(Release ID: 2178033)
AD/PLM/SG
(Release ID: 2178104)
Visitor Counter : 11