சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுவைப் பல்கலைக்கழகத்தில் சூழலுக்கு உகந்த எரிசக்தி மற்றும் நீரின் பங்களிப்பு என்ற சர்வதேச மாநாடு தொடங்கியது
Posted On:
01 OCT 2025 2:16PM by PIB Chennai

சூழலுக்கு உகந்த எரிசக்தி மற்றும் நீரின் பங்களிப்பு என்ற சர்வதேச மாநாடு புதுவைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இந்த மாநாடு, உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய தளமாக அமைந்துள்ளது.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், யுனெஸ்கோ ஆர்இசிஎஸ்டி பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் ஆர். அருண் பிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவைப் பல்கலைக்கழகம், மொரட்டுவா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நீர் மேலாண்மை மையம் மற்றும் யுனெஸ்கோ அமைப்பின் கீழ் செயல்படும் தெற்காசியா அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் நீடித்த எரிசக்தி மற்றும் நீர் ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “வசுதைவ குடும்பகம்” என்பது மனிதகுலம் முழுவதும் ஒரே குடும்பமாகும் என்ற ஆழமான சிந்தனையை பிரதிபலிக்கிறது. பூமி, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்திற்கு தீர்வு காண்பதிலும், இயற்கை சமநிலையை மீட்டெடுக்கவும் சுயமாக இயங்கும் இயற்கை செயல்முறைகளை கொண்டிருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் இந்த பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றன என்று கூறினார்.
மனிதகுலம், யுஎன்எப்சிசிசி, கியோட்டோ ஒப்பந்தம், கிளாஸ்கோ உடன்படிக்கை மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்களில் மேற்கொண்ட வாக்குறுதிகளைப் பின்பற்றத் தவறினால், அதன் தாக்கம் உலகம் முழுவதும் கடுமையாக உணரப்படும் என்று எச்சரித்தார். இந்த உடன்படிக்கைகள், தொழில்துறை காலத்துக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது, உலக வெப்பநிலை 2° செல்சியஸ்சிற்கும் குறைவாக கட்டுப்படுத்தும் வகையில், பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கணிசமாக குறைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
சார்க் நாடுகளின் பசுமை எரிசக்தித் துறையில் அளித்து வரும் முக்கிய பங்களிப்பு, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் மேற்கொண்டு வரும் தீவிர இலக்குகள் குறித்து அவர் சுட்டிக்காட்டினார். புதுவைப் பல்கலைக்கழகம் 2035-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய கரியமில வாயு வெளியேற்றத்திற்கான இலக்கை அடைவதற்கான திட்டத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் அருண் பிரசாத், “உலகம் ஒரு குடும்பம்” என்ற தொலைநோக்குப் பார்வையை மாநாட்டின் வழிகாட்டி கொள்கையாக எடுத்துக்கொண்டு, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.
மாநாட்டின் இறுதியில் நன்றியுரையாற்றிய பேராசிரியர் டி. எஸ். சரதா, அனைத்து விருந்தினர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும், ஒருங்கிணைப்பு குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார்.
***
SS/SV/SH
(Release ID: 2173621)
Visitor Counter : 19