இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2025 1:12PM by PIB Chennai
NC8E.jpeg)
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் (ஐஐடி) ஊக்குவிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனமான வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ், சாஸ்த்ரா விசி தலைமையில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் முன்தொடக்க நிதியை திரட்டியுள்ளது. உத்திசார் தொடக்க முதலீட்டாளர்கள் பங்கேற்புடன் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது.
தயாரிப்பு மட்டுமின்றி தொழில்நுட்பத் தளத்தையும் வான்கெல் புத்தாக்க நிறுவனம் உருவாக்கி வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில், இந்தியா மட்டுமின்றி உலகளாவிய சந்தைகளை எதிர்கொள்ளும் வகையில் 1,000-க்கும் மேற்பட்ட யூனிட்களை நிறுவ இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும், உணவு, பால், ஜவுளி, காகிதம், ரசாயனங்கள், மருந்துகள் போன்ற முக்கிய துறைகளில் 45,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை நீராவி கொதிகலன்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அழுத்தம் குறைக்கும் வால்வுகள் வழியே இந்த நீராவியின் பெரும்பகுதி செலுத்தப்படுகிறது, இவை நீராவி ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் சாதனங்களாக இருந்தபோதும், செயல்பாட்டின் போது நீராவி ஆற்றலை இழந்துவிடுகின்றன.
வான்கெல் நிறுவனத்தின் 'பீனிக்ஸ் எக்ஸ்பாண்டர்' ரோட்டரி சாதனம், அழுத்தம் குறைக்கும் வால்வுகளால் வீணாக்கப்படும் ஆற்றலை மீட்கிறது. இதன் மூலம் ஆலை உள்கட்டமைப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்யாமல் தூய மின்சாரமாக மாற்றுவதன் மூலம் இந்த ஆற்றல் இழப்பு சரிசெய்யப்படுகிறது.
இத்தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்த வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆலோசகரும், சென்னை ஐஐடி பேராசிரியருமான சத்தியநாராயணன் சேஷாத்ரி, தொழிற்சாலைகளில் வீணான நீராவி அழுத்தத்தை நம்பகமான, தூய ஆற்றலாக மாற்றுவதன் மூலம், பீனிக்ஸ் எக்ஸ்பாண்டர் தொழில்துறையில் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான புதிய அளவுகோலை நிறுவியுள்ளதாக குறிப்பிட்டார்.
***
SS/GK/AG/SH