சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஐஐடி-ன் புத்தொழில் நிறுவனமான ஜேஎஸ்பி என்விரோவின், அடுத்த தலைமுறை கழிவுநீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பம், தமிழ்நாடு தொழிற்சாலைகளில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது
Posted On:
10 SEP 2025 5:00PM by PIB Chennai

சென்னை ஐஐடியின் புத்தொழில் நிறுவனமான ஜேஎஸ்பி என்விரோ, அடுத்த தலைமுறை கழிவுநீர்த் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
நிலையான கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தின் களசெயல்பாடுகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த புத்தொழில் நிறுவனம் நாடு முழுவதும் தனது தயாரிப்பை விரிவுபடுத்தவும், அனைத்து துறைகளின் தொழில்களுக்கும் சேவை செய்யவும் தயார்நிலையில் உள்ளது.
‘பயோ-எலக்ட்ரோகெமிக்கல் அனெரோபிக் டைஜஸ்டர் சிஸ்டம்’ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, கழிவுநீரை நிர்வகித்தல், கார்பன் தடயத்தைக் குறைத்தல் ஆகிய இரட்டைச் சவால்களை எதிர்கொள்வதுடன், நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு செலவு சேமிப்பு, ஆற்றல் மீட்பு, கார்பன் குறைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
தற்போதுள்ள தொழில்நுட்பங்களுடன் உள்ள முக்கிய வேறுபாடுகள் குறித்து எடுத்துரைத்த புத்தொழில் நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஐஐடி சென்னையின் முன்னாள் மாணவருமான டாக்டர் வி.டி. ஃபிடல் குமார் கூறும்போது, "பாரம்பரிய ஏரோபிக் அமைப்புகள் கழிவுநீரில் ஆக்ஸிஜனை செலுத்த அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தநிலையில், பயோ-எலக்ட்ரோகெமிக்கல் அனெரோபிக் டைஜஸ்டர் சிஸ்டம்™ ஆக்ஸிஜன் இல்லாமலேயே இயங்குகிறது என்று தெரிவித்தார். மைக்ரோபையால் சுத்திகரிப்புடன் மின்முனைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், கழிவுகளிலிருந்து இந்த அமைப்பு மின்சாரத்தை மீட்டெடுக்கும் அதே வேளையில் ஆர்கானிக் கழிவுகளின் சிதைவு விகிதத்தை அதிகரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஈரோடு, பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள இரு தொழிற்சாலைகளில் வெற்றிகரமான நிறுவப்பட்டிருப்பதன் மூலம், நிலையான கழிவுநீர் மேலாண்மை என்பது சாத்தியமானது மட்டுமல்ல, லாபகரமானதும் கூட என்பதை ஜேஎஸ்பி என்விரோ நிறுவனம் தொழிற்சாலைகளுக்கு நிரூபித்துள்ளது.
***
AD/IR/AG/KR
(Release ID: 2165333)
Visitor Counter : 2