சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நிலக்கரி அமைச்சகத்தின் நட்சத்திர மதிப்பீட்டில் என்எல்சி சுரங்க நிறுவன முதல் பரிசை வென்றுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2025 7:08PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான, நெய்வேலி லிக்னைட் சுரங்க (என்எல்சிஐஎல்) நிறுவனத்தின் 1ஏ சுரங்கம் நட்சத்திர மதிப்பீட்டில் முதல் பரிசை வென்றுள்ளது. இதன் மூலம் நிலையான சுரங்க செயல்பாடுகளிலும், செயல்திறனிலும் தனது முன்னணி நிலையை என்எல்சி மீண்டும் நிரூபித்துள்ளது.
நிலக்கரி நிறுவனங்களுக்கு இடையே போட்டித் தன்மையையும், சிறந்த செயல்பாடுகளையும் ஊக்குவிக்க நட்சத்திர மதிப்பீட்டு நடைமுறை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே நெய்வேலி என்எல்சிஐஎல் நிறுவனம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான நட்சத்திர மதிப்பீட்டு விருது மும்பையில் இன்று (04 செப்டம்பர் 2025) நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி பங்கேற்று விருதுகளை வழங்கினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான எரிசக்தித்துறையில் தற்சார்பு என்ற இலக்கை அடைவதில் பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான திரு பிரசன்ன குமார் மோட்டுபள்ளி, இந்த நட்சத்திர மதிப்பீடு என்எல்சியின் சிறந்த செயல்திறனுக்கான அங்கீகாரம் என்று கூறினார். அடுத்த ஐந்தாண்டுகளில் சுரங்கத்தின் திறனை இருமடங்காக்கும் இலக்குடன் என்எல்சி செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் திரு சத்தீஷ் சந்திர துபே, நிலக்கரித்துறை செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***
AD/PLM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2163902)
வருகையாளர் எண்ணிக்கை : 22