சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜிப்மர் தலைவராக டாக்டர் சித்ரா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2025 2:47PM by PIB Chennai

புதுச்சேரியில் உள்ள ஜிப்மரின் தலைவராக டாக்டர் சித்ரா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்வி மற்றும் தொழில்முறை ரீதியாக 40 ஆண்டுகளுக்கும் மேலான சேவை, கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவர். டாக்டர் சித்ரா சர்க்கார் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நோயியல் நிபுணர் ஆவார். இவர் நரம்பியல் நோயியல், மூலக்கூறு புற்றுநோயியல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி நரம்பியல் நோயியல் துறையில் முன்னோடி பங்களிப்பை செய்துள்ளார்.
ஒரு திறமையான மருத்துவர், திறமையான ஆசிரியர் மற்றும் கல்வியாளர், உயர் திறன் கொண்ட ஒரு விஞ்ஞானி ஆகிய திறன்களை ஒருங்கிணைத்திருப்பவராக டாக்டர் சித்ரா சர்க்கார் உள்ளார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் அகாடமியால் வெளியிடப்பட்ட 100 புகழ்பெற்ற "இந்திய அறிவியல் பெண்கள்" பட்டியலில் ஒருவராகவும், நரம்பியல் இந்தியா 2019-ல் வெளியிட்ட மூன்று முன்னோடி "இந்திய நரம்பியல் அறிவியல் பெண்கள்" பட்டியலில் ஒருவராகவும் டாக்டர் சித்ரா சர்க்கார் விளங்குகிறார்.
டாக்டர் சித்ரா சர்க்கார் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 400-க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். டாக்டர் சித்ரா சர்க்கார், நரம்பியல் நோயியல் பற்றிய "எசென்ஷியல்ஸ் ஆஃப் டையாக்னஸ்டிக் சர்ஜிக்கல் நியூரோபாதாலஜி" என்ற தலைப்பிலான நூலின் ஆசிரியராகவும் உள்ளார்.
டாக்டர் சித்ரா சர்க்கார் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச வகைப்பாடு அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார். இந்த அமைப்பில் மூளை மற்றும் தண்டுவடக் கட்டிகளின் வகைப்பாடு, குழந்தைகளுக்கு ஏற்படும் கட்டிகளின் வகைப்பாடு, எண்டோகிரைன் மற்றும் நியூரோ-எண்டோகிரைன் கட்டிகளின் வகைப்பாடு ஆகியவை குறித்த ஆய்வுகளை எழுதியுள்ளார். சர்வதேச நரம்பியல் நோயியல் சங்கத்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மூளை மற்றும் தண்டுவடக் கட்டி வகைப்பாட்டிற்கான மூலக்கூறு மற்றும் நடைமுறை அணுகுமுறைகளைத் தெரிவிக்கும் கூட்டமைப்பில் இந்தியாவிலிருந்து சேர்க்கப்பட்டவர் டாக்டர் சித்ரா சர்க்கார் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, டாக்டர் சித்ரா சர்க்காரை வரவேற்றார். இந்த சந்திப்பில், ஜிப்மர் நிறுவனத்தின் சிறப்பான வரலாறு, முக்கிய மைல்கற்கள், தற்போதைய செயல்முறை அமைப்புகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
ஜிப்மரின் புதிய தலைவராக டாக்டர் சித்ரா சர்க்காரின் நியமனம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். அவரது நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவமும், அறிவியல் சிறப்பும், ஜிப்மரை நாட்டின் முன்னணி மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சுகாதார சேவை மையமாக மேலும் வலுப்படுத்தும் என்று டாக்டர் சித்ரா சர்க்காரின் நியமனம் குறித்து டாக்டர் வீர் சிங் நேகி தெரிவித்தார்.
***
AD/SMB/SG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2161482)
வருகையாளர் எண்ணிக்கை : 19