சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உலகளாவிய சுகாதாரக் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்த அமெரிக்காவின் எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸ் - உடன் சென்னை ஐஐடி கூட்டு சேர்ந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2025 1:09PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவுத் திட்டங்கள் மூலம் உலகளாவிய சுகாதாரத்தை மேமபடுத்துவதற்காக, அமெரிக்காவின் எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்சுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சியை செயல்படுத்தும் வகையில் எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸின் பலத்தை பொறியியல், தகவலியல், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் சென்னை ஐஐடியின் தலைமையுடன் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பு இடைவெளிகளை நீக்குவதிலும் உலகளாவிய விளைவுகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி புதிய தொழில்நுட்ப மேம்பாடு, பயன்பாட்டை விரைவபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நியூ ஆர்லியன்சில் உள்ள லூசியானா மாநில பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தின் கல்வி விவகாரங்களுக்கான துணைவேந்தர் டாக்டர் டெமெட்ரியஸ் ஜே.போர்ச், நியூ ஆர்லியன்சில் உள்ள லூசியானா மாநில பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தின் மரபியல் துறை எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸ் புற்றுநோய் மையத்தின் இயக்குநர் லூசியோ மியேல், சென்னை ஐஐடி டீன் (உலகளாவிய ஈடுபாடு) பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி, சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ஹிமான்ஷு சின்ஹா ஆகியோர் கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டனர்.
இந்த கூட்டாண்மை குறித்து எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸ் வேந்தர் டாக்டர் ஸ்டீவ் நெல்சன் கூறும்போது,
இந்த ஒப்பந்தத்தின் மூலம், 7 உயர்சிறப்பு மையங்களை உள்ளடக்கிய எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்சின் வலுவான ஆராய்ச்சித் திறன்கள், என்சிஐ அங்கீகார முயற்சிகள் ஆகியவற்றுடன் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இணைந்து செயல்படும். மரபணு, சுகாதார ஆய்வுகள், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் செயலிகள், மலிவு விலையில் நோய் கண்டறிதல், ஸ்மார்ட் மருத்துவ சாதனங்கள் போன்ற அளவிடும் கருவிகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை கூட்டுக்குழுக்கள் வழிநடத்தும்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி கூறுகையில், “லூசியானா மற்றும் வளைகுடா கடற்கரையில் எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸின் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனைகளுடன் எங்களின் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஒன்றிணைப்பதன் மூலம், சிந்தனைகளை உலகளாவிய சுகாதார தீர்வுகளாக உருவாக்க வழிவகை ஏற்பட்டுள்ளது” என்றார்.
2030-ம் ஆண்டுக்குள் நாட்டின் சிறந்த 50 கல்வி சுகாதார மையங்களில் எல்எஸ்யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸை இடம்பெறச் செய்வதே இந்தக் கூட்டாண்மையின் நோக்கம். அதே நேரத்தில் பயன்பாட்டுக்கான சுகாதார ஆராய்ச்சியில் சென்னை ஐஐடியின் உலகளாவிய ஈடுபாட்டையும் மேம்படுத்துகிறது.
கூடுதல் உயிரி மருத்துவப் பகுதிகளை விரிவுபடுத்த இரு நிறுவனங்களும் திட்டமிட்டிருப்பது, சுகாதார கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தாக்கத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
***
AD/SMB/SG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2161438)
வருகையாளர் எண்ணிக்கை : 5