சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியாவின் முதலாவது சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் அடிப்படையிலான குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டரை தொழில்துறைக்கு உரிமம் வழங்கும் ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி கையெழுத்திட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
18 AUG 2025 7:11PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்தியாவின் முதலாவது சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் அடிப்படையிலான அதிவேக குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டரை (QRNG) உள்நாட்டிலேயே உருவாக்கி, ரூ.1 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் தொழில்துறைக்கு உரிமம் வழங்கியிருக்கிறது.
சிலிக்கான் ஃபோட்டானிக் அதிவேக குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டரை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்காக சென்னை ஐஐடி-ன் தொழில்நுட்பப் பரிமாற்ற அலுவலகம் (TTO) இந்திரர்கா குவாண்டம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 2025 ஆகஸ்ட் 18 அன்று உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சென்னை ஐஐடியில் உள்ள புரோகிராமபிள் ஃபோட்டானிக் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் மற்றும் அமைப்புகளுக்கான மையத்தில் (Centre for Programmable Photonic Integrated Circuits and Systems – CPPICS) உருவாக்கப்பட்ட இந்த மைல்கல், தொழில்நுட்பத்தின் உத்திசார் மதிப்பையும் இந்தியாவின் குவாண்டம் கண்டுபிடிப்பு சூழலியலை மேம்படுத்துவதற்கான அதன் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.
முன்னதாக, குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டர் தொகுதியின் முன்மாதிரி (prototype) பதிப்பு இந்திய அரசின் குவாண்டம் தொழில்நுட்பத்திற்கான டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகள் ஆய்வகத்திடம் (DYSL-QT DRDO) அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தொகுதியின் மேம்பட்ட பதிப்பு உருவாக்கப்பட்டு குவாண்டம் பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் (SETS சென்னை) வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தலைமையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி-ன் பேராசிரியர் மனு சந்தானம், இந்திரர்கா குவாண்டம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் செயல் இயக்குநர் திரு தீனானாத் சோனி, ஐஐடி மின்பொறியியல் துறையின் பேராசிரியர் பிஜோய் கிருஷ்ணதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டாக்டர் சங்கதீப் தாஸ் (விஞ்ஞானி இ), சென்னை மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் டாக்டர் வி. நடராஜன் IZMO மைக்ரோசிஸ்டம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. நிதின் கட்கோன்கர், சென்னை ஐஐடியின் புரோகிராமபிள் ஃபோட்டானிக் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் மற்றும் அமைப்புகளுக்கான மையத்தின் டாக்டர் அரனாப் கோஸ்வாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய தொழில்நுட்பங்களின் உள்நாட்டு வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பேராசிரியர் வி.காமகோடி, “சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் என்பது குவாண்டம் தொழில்நுட்பங்களுடன் வலுவான இடைமுகத்தைக் கொண்ட வளர்ந்து வரும் துறையாகும். ரேண்டம் எண் உருவாக்கம் என்பது பாதுகாப்பான கணினி மற்றும் தகவல்தொடர்புக்கு முக்கியமான கட்டுமானத் தொகுதியாகும். சந்தையில் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய இந்த குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டரை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தியபோது, இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட களத்தில் பயன்படுத்தக்கூடிய சிலிக்கான் ஃபோட்டானிக் அடிப்படையிலான குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டர் தொகுதி இந்தியாவிற்குப் பெருமை அளிக்கக் கூடியதாகும்" என்றார்.
இத்தொழில்நுட்பத்தின் களசெயலாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேசிய இந்திரர்கா குவாண்டம் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு. தீனாநாத் சோனி கூறுகையில், “இந்தியாவின் முதலாவது சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் அடிப்படையிலான QRNG-ஐ சந்தைக்குக் கொண்டுவருவதில் ஐஐடி மெட்ராஸ் உடன் கூட்டுச் சேருவதில் எங்களுக்குப் பெருமை. புரட்சிகரமான இத்தொழில்நுட்பம் குவாண்டம் பாதுகாப்பு தீர்வுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதுடன் மேக் இன் இந்தியா முயற்சியின் வெற்றியையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த உள்நாட்டு கண்டுபிடிப்பை முக்கியமான துறைகளில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும், குவாண்டம் பாதுகாப்பில் உலகளாவிய தலைவராக இந்தியாவை நிறுவுவதற்கும், தொழில்நுட்ப சுயசார்பு குறித்த நமது நாட்டின் பார்வையை முன்னேற்றுவதற்கும் நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம்” என்றார்.
குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் பின்வரும் துறைகளில் முக்கியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது:
*ராணுவம் மற்றும் பாதுகாப்புக்கான தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு
*கிரிப்டோகிராஃபிக் வழிமுறைகள்
*குவாண்டம் விசை விநியோகம் (QKD)
*அறிவியல் மாதிரிப்படுத்துதல் மற்றும் உருவகப்படுத்துதல்கள்
*நிதி பரிவர்த்தனைகள், பிளாக்செயின் மற்றும் ஓடிபி உருவாக்கம்
*கேமிங் பயன்பாடுகள்
சென்னை ஐஐடியின் தலைவர் (ஐசி&எஸ்ஆர்) பேராசிரியர் மனு சந்தானம் கூறும்போது, “உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியை மாற்றத்திற்கான தீர்வுகளாக மாற்றும் ஐஐடி மெட்ராஸ்-ன் தொலைநோக்குப் பார்வையை நிரல்படுத்தக்கூடியதாக ஃபோட்டானிக் ஒருங்கிணைந்த சுற்றுகள் மற்றும் அமைப்புகள் மையம் (CPPICS) அமைந்துள்ளது. சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் அடிப்படையிலான QRNG-ன் வெற்றிகரமான மேம்பாடு மற்றும் உரிமம் வழங்குதல், வலுவான தொழில்துறை கூட்டாண்மைகளால் ஆதரிக்கப்படும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடில் தீவிர கவனம் செலுத்தும்போது எவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களை வழங்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்" எனத் தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பத்தின் தாக்கத்தை எடுத்துரைத்த, சென்னை ஐஐடியின் சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் CoE-CPPICS-ன் தலைமை புலனாய்வாளர் பேராசிரியர் பிஜோய் கிருஷ்ண தாஸ் கூறும்போது, "களத்தில் பயன்படுத்தக்கூடிய QRNG தொகுதி இந்தியாவிலிருந்து வந்த முதலாவது சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் அடிப்படையிலான தயாரிப்பு எனக் கருதுகிறேன் - இது நமது நாட்டின் ஆராய்ச்சி பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல். சென்னை ஐஐடியில் சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் CoE-CPPICS-ஐ நிறுவ நிதி உதவி செய்ததற்காக மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
***
AD/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2157795)
வருகையாளர் எண்ணிக்கை : 15