சுற்றுலா அமைச்சகம்
புனித யாத்திரை புத்துயிர்ப்பு, ஆன்மீகம், பாரம்பரிய வளர்ச்சி இயக்கம் (பிரசாத்) மற்றும் சுதேச தரிசனத் திட்டம்
Posted On:
04 AUG 2025 5:01PM by PIB Chennai
சுற்றுலா அமைச்சகமானது புனித யாத்திரை புத்துயிர்ப்பு, ஆன்மீகம், பாரம்பரிய வளர்ச்சி இயக்கம் (பிரசாத்) என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட சமயம்சார்ந்த மற்றும் பாரம்பரிய இடங்களை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 28 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 54 செயல்திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன.
அனுமதிக்கப்பட்ட செயல் திட்டங்களை சம்பந்தப்பட்ட மாநில / யூனியன் பிரதேச அரசுகள் செயல்படுத்தி வருகின்றன். பிரசாத் திட்டத்தின் கீழ் செயல்திட்டங்கள் முழுமை அடைவதில் தாமதம் ஏற்படுவதற்கு டெண்டர் நடைமுறை, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருப்பது போன்றவை காரணமாக அமைகின்றன. எனினும் சுற்றுலா அமைச்சகமானது செயல்திட்டங்களின் நடைமுறைப்படுத்தும் முன்னேற்றங்களை தொடர்ச்சியாக கண்காணித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவற்றை முழுமையடையச் செய்யுமாறு மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
சுதேசி தரிசனத் திட்டத்தின் கீழ் சுற்றுலா அமைச்சகம் அடையாளம் காணப்பட்ட மையக்கருத்திலான சுற்றுவழித்தடங்களுக்காக ரூ.5290.30 கோடி மதிப்பீட்டில் 76 செயல்திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அமைச்சகம் இந்தத் திட்டத்தை சுதேசி தர்ஷன் 2.0 என்று புதுப்பித்து உள்ளது. இதன் கீழ் நீடித்த மற்றும் பொறுப்பான சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.2108.87 கோடி மதிப்பீட்டில் 52 செயல்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பிராந்திய மற்றும் கலாச்சார பன்முகத் தன்மையை கவனத்தில் எடுத்துக்கொண்டு திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்பவும் தொடர்புடைய மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்தும் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சுதேச தரிசனத் திட்டத்தின் கீழ் ஊரகம், இமாலயம், பழங்குடியினப் பகுதி, சுற்றுச்சூழல் சுற்றுலா, வனவிலங்கு, கடலோரம், வடகிழக்கு போன்ற கருப்பொருளில் 76 செயல்திட்டங்களை அமைச்சகம் அனுமதித்துள்ளது.
நமது தேசத்தைப் காணுங்கள் என்ற முன்முயற்சியை சுற்றுலா அமைச்சகம் 2020ல் தொடங்கியது. வெபினார்கள், வினாடி-வினா, சமூக ஊடகம், கருத்தரங்குகள், சுற்றுலா அபிவிருத்தி நிகழ்வுகள் போன்றவற்றின் மூலம் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
பிரசாத் திட்டத்தின்கீழ் தமிழ் நாட்டில் ரூ.13.99 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் திட்டமும் ரூ.4.86 கோடி மதிப்பில் வேளாங்கண்ணி திட்டமும் நிறைவு பெற்றுள்ளன. ரூ.40.94 கோடி மதிப்பீட்டில் நவக்கிரக கோவில்கள் சுற்றுவழி சுற்றுலா திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. புதுச்சேரியில் ரூ.25.94 கோடி மதிப்பீட்டில் காரைக்கால் தர்ப்பாரணேசுவரர் கோவில் மேம்பாடு மற்றும் ஆன்மீகப் பூங்கா அமைக்கும் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. சுதேசி தரிசனம் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் ரூ.58.44 கோடி மதிப்பீட்டில் கடலோர சுற்றுவழி சுற்றுலாத் திட்டம், ரூ.49.44 கோடி மதிப்பீட்டில் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய இடங்களில் ஃப்ராங்கோ-தமிழ் கிராமம் அமைக்கும் திட்டம், ரூ.34.96 கோடி மதிப்பீட்டில் ஆன்மீக புதுச்சேரி சுற்றுவழி திட்டம் ஆகியவை அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று தமிழ்நாட்டில் சென்னை-மாமல்லபுரம்-இராமேஸ்வரம்-மணப்பாடு-கன்னியாகுமரி கடலோர சுற்றுவழி சுற்றுலாத் திட்டத்திற்கு ரூ.73.13 கோடி மதிப்பீட்டில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.
***
(Release ID: 2152140)
AD/TS/DL
(Release ID: 2152366)