சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சுதந்திர போராட்டத்தின் அடையாளமாக இருந்த காதி இப்போது பொருளாதார சுதந்திரத்தின் அடையாளமாக உள்ளது - கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார்
Posted On:
03 AUG 2025 1:13PM by PIB Chennai
ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக இருந்த காதி இப்போது பொருளாதார சுதந்திரத்தின் அடையாளமாக உள்ளது என காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமான கேவிஐசி-யின் தலைவர் திரு மனோஜ் குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் திருப்பூரில், கிராமப்புற கைவினைஞர்களை மேம்படுத்துவதையும் காதியின் பாரம்பரியத்தை புத்துயிர் பெறச் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். கைவினைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய திரு மனோஜ் குமார், கதர் உற்பத்தி ₹27,569.37 கோடியிலிருந்து ₹1.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார். விற்பனை 11 ஆண்டுகளில் ₹1.70 லட்சம் கோடியை எட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

2985-க்கும் மேற்பட்ட காதி நிறுவனங்கள் 5 லட்சம் கைவினைஞர்களை ஈடுபடுத்துவதாகவும் இதில் 80% பேர் பெண்கள் எனவும் அவர் தெரிவித்தார். ஊதியம் 275% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வழங்குநர்களாக மாற உதவும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் கேவிஐசி-யின் முதன்மைத் திட்டம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார், கிராமோத்யாக் விகாஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் 620 கைவினைஞர்களுக்கு 556 இயந்திரங்கள் மற்றும் கருவிகள், 220 மண்பாண்டக் கைவினைஞர்களுக்கு 280 மின்சார மண்பாண்ட சக்கரங்கள், 220 தையல் தொழிலாளர்களுக்கு துணைக்கருவிகளுடன் 220 தையல் இயந்திரங்கள், 40 கைவினைஞர்களுக்கு 40 புளி பதப்படுத்தும் கருவித்தொகுப்புகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு பாரம்பரிய கைவினைகளில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் உற்பத்தித்திறன், தரம் மற்றும் வருமானம் ஈட்டும் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக கோயம்புத்தூரில் 2025 ஆகஸ்ட் 01 அன்று ஒரு காதி நாடகம் மற்றும் ஃபேஷன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. "காதியின் கதை - திருப்பூர் குமரனின் காலப் பயணம்" மற்றும் "காதியின் வெற்றி" ஆகிய 2 நாடகங்கள் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து "தேசத்திற்கான காதி, ஃபேஷனுக்கான காதி - நடைமுறையில் காதி" என்ற தலைப்பில் ஒரு பெரிய அளவிலான காதி ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

***
AD/SM/PLM/RJ
(Release ID: 2151916)