சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2025-26-ம் கல்வியாண்டு செயல்பாடுகள் - தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தொடங்கி வைத்தார்

தேசப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் முக்கிய பங்காற்றுகிறது: திரு ஆர். என். ரவி

Posted On: 29 JUL 2025 7:33PM by PIB Chennai

குஜராத்தின் காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்ட செயல்பாடுகளையும், வகுப்புகளையும் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி இன்று (29.07.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் பாதுகாப்பு சூழலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்கு பயிலும் மாணவர்களுக்கும், ஆயுதப்படைகளுக்கும், காவல்துறையினருக்கும் பயிற்சி அளிப்பது மட்டுமே இந்தப் பல்கலைக்கழகத்தின் பணி அல்ல என்றும், சவால்களைக் கண்டறிந்து தயார்நிலையை வலுப்படுத்துவதிலும் இப்பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றுவதாகவும் அவர் கூறினார். இப்பல்கலைக்கழகத்தை உருவாக்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.   

சவால்களுக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொண்டு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசுக்கும், பாதுகாப்புத்துறைக்கும், காவல்துறைக்கும் தீர்வுகளை வழங்குவதிலும் இப்பல்கலைக்கழகம் பங்காற்றியதாக கூறினார். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தேசத்தின் நலன்களை பாதுகாப்பதிலும், பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று திரு ஆர். என்.ரவி கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு படேல், இப்பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள் குறித்தும், புதுமையான கல்வி முறைகள் குறித்தும் இப்பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.  

 

2020-ம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், உள்நாட்டுப் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, இணையதளப் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக உயர்தர கல்வி மற்றும் பயிற்சியை வழங்குகிறது.

     

***

AD/PLM/RJ/DL


(Release ID: 2149913)
Read this release in: English