சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தனியார் கார் / ஜீப் / வேன்களுக்கு வருடாந்திர பயண அட்டை ஆகஸ்ட் 15-ல் அறிமுகம்

Posted On: 21 JUL 2025 5:53PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த 17.06.2025 அன்று வெளியிட்ட தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 அறிவிப்பின் மூலம், தனியார் கார் வேன் / ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை வசதி 2025 ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு மத்திய அரசின் இந்த சலுகை பேருதவியாக இருக்கும்

3,000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண அட்டையை பெறும் தனியார் கார் / வேன் / ஜீப் உரிமையாளர்கள், ஒரு வருடத்திற்கோ அல்லது 200 முறையோ கட்டணம் இன்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச் சாலை கட்டண மையங்களை கடப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போதைய கட்டணத்தின்படி சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஒருமுறை பயணம் மேற்கொள்ள கட்டண மையங்களில் ரூபாய் 445 செலுத்த வேண்டும். மாதம் இருமுறை சென்றுவர, பயனர்கள் வருடத்திற்கு 10,680 ரூபாய் செலுத்த வேண்டும். புதிய வருடாந்திர பயண அட்டை மூலம், பயனர்கள் 7,680 ரூபாய் சேமிக்க முடியும். 56 முறை கூடுதலாக கட்டண மையங்களை கடக்கவும் இந்த நடைமுறை உதவும்.

இதேபோல், சென்னை திருச்சி வழித்தடத்தில் பயணிக்கும் பயனர்கள் 8,880 ரூபாய் வரை சேமிக்கவும், 7 கட்டண மையங்களை 168 முறை கடக்கவும்  இந்த வருடாந்திர பயண அட்டை நடைமுறை உதவுகிறது.

ராஜ்மார்க் யாத்ரா செயலி மற்றும் என்.எச்.ஏ.ஐ. இணையதளம் மூலம் மட்டுமே இந்த வருடாந்திர பயண அட்டையை பெறமுடியும். மேலும் இந்த பயண அட்டை, வாகனம் தொடர்புடைய ஃபாஸ்ட்டிராக்கின் தகுதி சரிபார்க்கப்பட்ட பின் செயல்படுத்தப்படும்.

வாஹன் தரவு தளத்தின் மூலம் சரிபார்க்கப்பட்ட பின், இந்த வருடாந்திர பயண அட்டையை, வணிகம் அல்லாத மற்றும் தனியார் கார் / ஜீப் / வேன்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு எந்த வணிக வாகனத்திலும் இந்த பயண அட்டை பயன்படுத்தப்பட்டால்  அது உடனடியாக செயலிழந்துவிடும்.

***

AD/GK/LDN/KR


(Release ID: 2146454)
Read this release in: English